'இந்திய மதங்களில் தனித்த பெருமையை கொண்டது இஸ்லாம்' : தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல்
தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் செவ்வாயன்று (ஜூலை 11), பல நூற்றாண்டுகளாக நல்லிணக்கத்துடன் இணைந்திருக்கும் கலாச்சாரங்கள் மற்றும் மதங்களின் கலவையாக இந்தியா உள்ளதாக தெரிவித்தார். டெல்லியில் உள்ள இந்திய இஸ்லாமிய கலாச்சார மையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்று பேசிய தோவல், "இந்தியாவில் உள்ள மத குழுக்களிடையே, இஸ்லாம் ஒரு தனித்துவமான மற்றும் குறிப்பிடத்தக்க பெருமையை கொண்டுள்ளது" என மேலும் கூறினார். இந்நிகழ்ச்சியில், தற்போது இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள, முஸ்லீம் உலக லீக் பொதுச் செயலாளர், ஷேக் டாக்டர் முகமது பின் அப்துல்கரீம் அல்-இசாவும் பங்கேற்று உரையாற்றினார். அல்-இசாவை மிதவாத இஸ்லாத்தின் உண்மையான உலகளாவிய குரல் என்றும், இஸ்லாம் பற்றிய ஆழமான புரிதல் கொண்ட அறிஞர் என்றும் அஜித் தோவல் அப்போது பாராட்டினார்.
சவூதி அரேபியாவுடனான இந்தியாவின் உறவு குறித்து அஜித் தோவல்
இந்தியாவிற்கும், சவூதி அரேபியாவிற்கும் இடையிலான சிறந்த உறவுகளைப் பாராட்டிய அஜித் தோவல், இருநாடுகளுக்கும் இடையே உள்ள உறவு, பகிரப்பட்ட கலாச்சார பாரம்பரியம், பொதுவான மதிப்புகள் மற்றும் பொருளாதார உறவுகளில் வேரூன்றி உள்ளதாக கூறினார். மேலும், இருநாட்டு தலைவர்களும், எதிர்காலத்திற்கான பொதுவான பார்வையைப் பகிர்ந்து கொள்கிறார்கள் மற்றும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக தொடர்பு கொண்டுள்ளனர் என்று கூறினார். மக்கள் தொகை அடிப்படையில், இந்தியா உலகின் இரண்டாவது பெரிய முஸ்லீம் மக்கள்தொகையைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்தியா உறுப்பு நாடாக இல்லாத, இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின் 33 க்கும் மேற்பட்ட உறுப்பு நாடுகளின் ஒருங்கிணைந்த மக்கள்தொகைக்கு இந்தியாவின் முஸ்லீம் மக்கள்தொகை கிட்டத்தட்ட சமமாகும்.