அருணாச்சல் பகுதிகளுக்கு 'மறுபெயரிட்ட' சீனா: இந்தியா கடும் எதிர்ப்பு
அருணாச்சல பிரதேசத்தில் உள்ள 11 இடங்களின் பெயரை சீனா 'மாற்றியதற்கு' மறுப்பு தெரிவித்த இந்தியா, அந்த மாநிலம் "எப்போதும்" இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியாக தான் இருக்கும் என்று தெரிவித்துள்ளது. அருணாச்சல பிரதேசத்தின் மீதான தனது உரிமையை மீண்டும் வலியுறுத்தும் விதமாக, அருணாச்சலில் இருக்கும் 11 இடங்களுக்கு புதிய பெயர்களை சீனா வெளியிட்டது. "திபெத்தின் தெற்குப் பகுதியான ஜங்னான்" என்று அருணாச்சலப் பிரதேசத்தை அழைக்கும் சீனா, அங்குள்ள இடங்களுக்கு மூன்றாவது முறையாக மறுபெயரிட்டிருக்கிறது. சீனா வெளியிட்டுள்ள பெயர் பட்டியலில் ஐந்து மலைச் சிகரங்கள், இரண்டு நிலப் பகுதிகள், இரண்டு குடியிருப்புப் பகுதிகள் மற்றும் இரண்டு ஆறுகள் உள்ளன. இதற்கு பதிலளிக்கும் விதமாக இந்தியா ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்தியா வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
"இத்தகைய அறிக்கைகளை நாம் ஏற்கனவே பார்த்திருக்கிறோம். சீனா இப்படிப்பட்ட முயற்சியை மேற்கொள்வது இது முதல் முறையல்ல. இதை நாங்கள் முற்றிலுமாக நிராகரிக்கிறோம். அருணாச்சலப் பிரதேசம் இந்தியாவின் ஒரு ஒருங்கிணைந்த மற்றும் பிரிக்க முடியாத பகுதியாக இருந்து வருகிறது. புதிதாக பெயர்கள் வைப்பது இந்த யதார்த்தத்தை மாற்றாது." என்று வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற முதல் இரண்டு பட்டியல்கள் 2018 மற்றும் 2021 இல் வெளியிடப்பட்டன. 2017ஆம் ஆண்டு தலாய் லாமா அருணாச்சல பிரதேசத்திற்கு விஜயம் செய்த சில நாட்களில் முதல் பெயர் பட்டியலை சீனா அறிவித்தது. மேலும், திபெத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாமா இந்தியாவுக்கு வருகை தந்ததை சீனா கடுமையாக விமர்சித்திருந்தது.