100 நாட்களுக்கு பின் மணிப்பூரில் இணைய சேவைகளுக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கம்
நான்கு மாதங்களுக்கும் மேலாக இனக்கலவரத்தில் சிக்கித் தவிக்கும் மணிப்பூர் மாநிலத்தில் இன்று முதல் இணைய சேவைகள் முழுமையாகத் திரும்பும் என்று அம்மாநில முதல்வர் என் பிரேன் சிங் அறிவித்துள்ளார். "அசம்பாவித சம்பவங்களைத் தடுப்பத்தற்காகத்தான், மாநில அரசு இணையத் தடை விதித்திருந்தது என்பதை மணிப்பூர் மக்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்று முதல் பொதுமக்களுக்கு இணையதள சேவைகள் மீண்டும் தொடங்கப்படும்" என்று சிங் இன்று நடந்த செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார். ஜூலை 25 அன்று, மணிப்பூரில் பிராட்பேண்ட் சேவைகள் குறிப்பிட்ட நிபந்தனைகளுடன் மீண்டும் தொடங்கப்பட்டன என்று மாநில உள்துறை ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது. ஆனால், அப்போது மொபைல் இன்டர்நெட் சேவைவுக்கு விதிக்கப்பட்டிருத்த தடை நீக்கப்படவில்லை.
இணையத் தடையால் பல்வேறு துறைகள் பாதிப்பு
அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், சுகாதார வசதிகள் மற்றும் ஆன்லைன் குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளை மணிப்பூரின் இணையத் தடை பாதித்ததால், இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மணிப்பூரில் உள்ள குக்கி என்ற பழங்குடியின சமூகத்திற்கும் அந்த மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் மெய்த்தே சமூகத்தினருக்கும் ஏற்பட்ட பிரச்சனையால் மே 3ஆம் தேதி மணிப்பூரில் கலவரம் வெடித்தது. அதன் பிறகு, 4 மாதங்களுக்கு மேல் ஆகியும் இப்போது வரை அந்த மாநிலம் பதட்ட நிலையுடன் தான் செயல்பட்டு வருகிறது. இதனால், வதந்திகளை பரவவிடாமல் தடுப்பதற்காக, 4 மாதங்களுக்கு முன்பு அம்மாநிலத்தில் இணைய சேவைகள் முழுவதுமாக தடை செய்யப்பட்டது.