மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை: மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி
மத்தியப் பிரதேச மாநிலத்தில் ஏழை பெண்களுக்கு நடத்தப்பட்ட இலவச திருமண திட்டத்தின் போது, மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை நடத்தப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சனிக்கிழமை அன்று, மத்திய பிரதேச மாநில அரசின் சார்பாக 219 ஏழை பெண்களுக்கு திருமணம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அட்சய திருதியை முன்னிட்டு நடத்தப்பட்ட இந்த திருமண விழாவில், மணப்பெண்களுக்கு கர்ப்ப பரிசோதனை செய்யப்பட்டது தற்போது பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. திருமணம் செய்துகொள்ள இருந்த 219 பெண்களில் 5 பேர் கர்ப்பமாக இருப்பது தெரிய வரவே, அவர்களது திருமணம் நிறுத்தப்பட்டது.
பரிசோதனைகளுக்கு உத்தரவிட்டது யார்: மாநில காங்கிரஸ்
முக்யமந்திரி கன்யா விவாகம் என்ற திட்டத்திற்கு கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த திருமண நிகழ்வு, திண்டோரி மாவட்டத்தின் கட்சராய் பகுதியில் நடத்தப்பட்டது. இந்த நிகழ்வினால், பாஜக தலைமையிலான மாநில அரசை எதிர்க்கட்சிகள் சாடி வருகின்றன. இது குறித்து பாஜகவை சாடிய காங்கிரஸ் கட்சி, இந்த பரிசோதனைகளுக்கு உத்தரவிட்டது யார் என்ற கேள்வியை எழுப்பியுள்ளது. மேலும், ஏழை மக்களை அவமானப்படுத்திய இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் காங்கிரஸ் கட்சி வலியுறுத்தியுள்ளது. இந்த சம்பவம் குறித்து உயர்மட்ட விசாரணை நடத்த வேண்டும் என்று மாநில காங்கிரஸ் தலைவர் கமல்நாத் கோரிக்கை விடுத்துள்ளார். இந்த நிகழ்வில் 200க்கும் மேற்பட்ட பெண்கள் கர்ப்ப பரிசோதனை செய்ய வற்புறுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.