Page Loader
இந்தியா முழுவதும் 9,86,585 ஆசிரியருக்கான காலி பணியிடங்கள் - உடனடியாக நிரப்ப அறிவுறுத்தல் 
இந்தியா முழுவதும் 9,86,585 ஆசிரியருக்கான காலி பணியிடங்கள் - உடனடியாக நிரப்ப அறிவுறுத்தல்

இந்தியா முழுவதும் 9,86,585 ஆசிரியருக்கான காலி பணியிடங்கள் - உடனடியாக நிரப்ப அறிவுறுத்தல் 

எழுதியவர் Nivetha P
Aug 16, 2023
02:50 pm

செய்தி முன்னோட்டம்

கடந்த 11ம் தேதியோடு நாடாளுமன்றம் மழைக்கால கூட்டத்தொடர் முடிவடைந்தது. இதில் மகளிர், இளைஞர், கல்வி மற்றும் விளையாட்டுத்துறைக்கான பாஜக.,எம்.பி.விவேக் தாக்கூர் தலைமையிலான நிலைக்குழு ஒரு முக்கிய அறிவிப்பினை தெரிவித்துள்ளது. அதன்படி இந்தியா முழுவதும் 2022-23 கல்வியாண்டில் உள்ள அரசு பள்ளிகளில் மொத்தம் 62,72,380 ஆசிரியர்கள் பணியிடங்கள் உள்ளன. இதில் 9,86,585 பணியிடங்கள் பல காரணங்களால் நிரப்பப்படாமல் காலியாகவுள்ளது. இவற்றுள் 7,47,565 துவக்கப்பள்ளிகளிலும் 1,46,334 உயர்நிலை பள்ளிகளிலும் மற்றும் 92,666 மேல்நிலைப்பள்ளிகளிலும் பணியிடங்கள் காலியாக உள்ளது என்று கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த காலி பணியிடங்களை நிரப்பினால் மட்டுமே மத்திய அரசின் புதிய கல்வி கொள்கைப்படி 30 மாணவர்களுக்கு ஓர் ஆசிரியர் என்னும் சதவிகிதம் அமல்படுத்த முடியும் என்றும் நிலைக்குழு தனது கருத்தினை பதிவு செய்துள்ளது.

நிலைக்குழு 

காலிப்பணியிடங்களுக்கான காரணங்கள் வெளிப்படையாக இல்லை என தகவல் 

இதனை தொடர்ந்து, "நாட்டின் பெரும்பாலான மாநிலங்களில் இந்த காலிப்பணியிடங்களுக்கான காரணங்கள் வெளிப்படையாக இல்லை. இதனை ஒழுங்குபடுத்த ஆசிரியர்கள் சரியான முறையில் தேர்வு செய்யப்பட்டு நியமிக்கப்பட வேண்டும். அதற்கான தன்னாட்சி அதிகாரம் கொண்ட அமைப்புகளை மாநில அரசுகள் அமைக்கவேண்டும்" என்றும் இந்த நிலைக்குழு கூறியுள்ளது என்று தெரிகிறது. தொடர்ந்து, கல்வி என்பது மத்திய-மாநில அரசுகளின் பொதுப்பட்டியலில் உள்ளது என்பதால் ஆசிரியருக்கான காலி பணியிடங்களை நிரப்புவது அந்தந்த மாநில அரசுகளின் கடமை என மத்திய அரசு அண்மையில் கூறியிருந்தது. இதனை ஏற்க மறுத்துள்ள நிலைக்குழு, ஆசிரியருக்கான காலி பணியிடங்களை உடனே நிரப்ப அனைத்து மாநில அரசுகளுக்கும் மத்திய அரசு அறிவுறுத்தல் வழங்க வேண்டும் என்றும் கூறியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.