ஏர்பஸ் நிறுவனத்திடமிருந்து புதிதாக 500 விமானங்களை வாங்கும் இன்டிகோ
ஏர்பஸ் விமான தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து புதிதாக 500 விமானங்களை வாங்குவதற்கு ஒப்பந்தம் செய்திருக்கிறது இந்தியாவைச் சேர்ந்த குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான இன்டிகோ. இந்த ஆண்டு துவக்கத்தில் ஏர்பஸ் மற்றும் போயிங் நிறுவனங்களிடமிருந்து 470 விமானங்களை வாங்குவதற்கு டாடா நிறுவனத்தின் ஏர் இந்தியா மேற்கொண்ட ஒப்பந்தமே இந்திய விமான சேவை வரலாற்றில் இதுவரை செய்யப்பட்ட மிக அதிக அளவிலான விமானங்களைக் கொண்ட ஒப்பந்தமாகப் பேசப்பட்டது. 500 புதிய விமானங்களுக்கான இன்டிகோ நிறுவனத்தின் இந்த ஒப்பந்தமே, இந்திய விமான சேவை வரலாற்றில் அதிக எண்ணிக்கையிலான விமானங்களை கொண்ட ஒப்பந்தமாகும். ஏற்கனவே ஏர்பஸ் நிறுவனத்திடம் இருந்து 830 விமானங்களை பெறுவதற்கான ஒப்பந்தத்தை இன்டிகோ நிறுவனம் போட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
ஏர்பஸ் நிறுவனத்துடன் இன்டிகோவின் ஒப்பந்தம்:
தற்போது பிரான்ஸ் நாட்டில் உள்ள பாரிஸில் நடைபெற்று வரும் 'ஏர் ஷோ' நிகழ்ச்சியிலேயே ஏர்பஸ்ஸூடனான இந்த ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டிருக்கிறது இன்டிகோ நிறுவனம். மேலும், இந்த புதிய ஒப்பந்தத்தின் கீழ் A320 ரக விமானங்களை இன்டிகோ நிறுவனம் பெறவிருக்கிறது. இந்த விமானங்கள் 2030 முதல் 2035-ம் ஆண்டிற்குள் படிப்படியாக இன்டிகோ நிறுவனத்திற்கு வழங்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஏர்பஸ் நிறுவனத்துடன் இன்டிகோ மேற்கொண்ட ஒப்பந்தத்திலேயே 480 விமானங்களை ஏர்பஸ் நிறுவனம் வழங்க வேண்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. புதிய ஒப்பந்தத்தின் மதிப்பு 50 பில்லியன் டாலர்களாக இருக்கும் எனக் கணக்கிடப்பட்டிருக்கும் நிலையில், சலுகைகளுடன் இதனை விட குறைவான மதிப்பிலேயே இன்டிகோ நிறுவனம் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் என எதிர்பார்க்கப்படுகிறது.