Loading...
பெங்களூரு - லக்னோ இண்டிகோ விமானத்தில் கடத்தல் மிரட்டல் கடிதம்: நடுவானில் திருப்பப்பட்டு அவசரமாகத் தரையிறக்கம்
நடுவானில் திருப்பப்பட்டு அவசரமாக தரையிறக்கபட்ட இண்டிகோ விமானம்

பெங்களூரு - லக்னோ இண்டிகோ விமானத்தில் கடத்தல் மிரட்டல் கடிதம்: நடுவானில் திருப்பப்பட்டு அவசரமாகத் தரையிறக்கம்

எழுதியவர் Venkatalakshmi V
Nov 08, 2026
12:34 pm

செய்தி முன்னோட்டம்

பெங்களூருவில் இருந்து லக்னோ நோக்கி புறப்பட்ட இண்டிகோ விமானத்தில் கழிப்பறையில் கடத்தல் மிரட்டல் கடிதம் ஒன்று சிக்கியதை அடுத்து, விமானம் நடுவானில் இருந்து உடனடியாக பெங்களூருக்கே திருப்பப்பட்டு அவசரமாகத் தரையிறக்கப்பட்டது. மாலை 5:50 மணியளவில் 178 பயணிகளுடன் பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே இந்த பரபரப்பான சம்பவம் நிகழ்ந்துள்ளது. விமானத்தில் பயணம் செய்த பயணி ஒருவர் கழிப்பறைக்குச் சென்ற போது, அங்கு கைப்பட எழுதப்பட்ட மிரட்டல் கடிதம் ஒன்றைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். அதில்,"இந்த விமானம் சரியாக மாலை 06:30 மணிக்கு கடத்தப்படப் போகிறது. இதை அலட்சியப்படுத்தினால் விளைவுகளைச் சந்திக்க நேரிடும்" எனக் குறிப்பிடப்பட்டிருந்தது. உடனடியாக அப்பயணி இது குறித்து விமானப் பணிப்பெண்களிடம் தெரிவித்துள்ளார்.

ஆய்வு

பாதுகாப்புப் படையினர் ஆய்வு

பணிப்பெண்கள் மூலமாக தகவலறிந்த விமானி, உடனடியாக வான்வழிப் போக்குவரத்து கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவித்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக விமானத்தை பெங்களூருக்கே திருப்பிச் செல்ல முடிவெடுத்தார்.

இதன் காரணமாக பெங்களூரு விமான நிலையத்தின் டெர்மினல் 1-ல் முழு அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டது.

பெங்களூரு விமான நிலையத்தில் விமானம் பத்திரமாக தரையிறக்கப்பட்டதும், 178 பயணிகளும் உடனடியாக பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

விமானம் உடனடியாக பிரத்யேக தனிமைப்படுத்தப்பட்ட பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, மத்திய தொழில் பாதுகாப்புப் படை மற்றும் பெங்களூரு காவல்துறையினரால் சூழப்பட்டது.

வெடிகுண்டு கண்டறியும் நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் படையினர் மூலம் விமானம் மற்றும் பயணிகளின் உடமைகள் அனைத்தும் சோதனையிடப்பட்டன.

சோதனையின் முடிவில் இது ஒரு போலி மிரட்டல் என்பது உறுதி செய்யப்பட்டது.

ADVERTISEMENT