2025-26 நிதியாண்டில் இந்திய ரயில்வே 100% மின்மயமாக்கல் இலக்கை எட்டும்; அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் உறுதி
செய்தி முன்னோட்டம்
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை ஏற்றுக்கொள்வதற்கான உறுதிப்பாட்டை மேம்படுத்தும் அதே வேளையில், அடுத்த நிதியாண்டில் இந்திய ரயில்வே 100% மின்மயமாக்கலை அடையத் திட்டமிட்டுள்ளதாக மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அறிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் நடைபெற்ற உலகளாவிய முதலீட்டாளர்கள் உச்சி மாநாடு 2025 இல் பேசிய அஸ்வினி வைஷ்ணவ், 2030 ஆம் ஆண்டுக்குள் இந்திய ரயில்வேயை சுற்றுச்சூழலுக்கு மாசில்லாத நெட்-ஜீரோ கார்பன் இலக்கை அடைவோம் என நம்பிக்கை தெரிவித்தார்.
ரயில்வே நெட்வொர்க்கின் 97% க்கும் மேற்பட்ட பகுதிகள் ஏற்கனவே மின்மயமாக்கப்பட்டுவிட்டன. 2025-26 நிதியாண்டில் முழு மின்மயமாக்கல் எதிர்பார்க்கப்படுகிறது என்று அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்தார்.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தி
இந்திய ரயில்வேயின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் திறன்
மத்தியப் பிரதேசத்துடன் சமீபத்தில் 170 மெகாவாட் மின் கொள்முதல் ஒப்பந்தம் கையெழுத்தானதுடன், இந்திய ரயில்வே 1.5 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி திறனைப் பெற்றுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
ரயில்வே, வாரிய எனர்ஜிஸ் மற்றும் ரேவா அல்ட்ரா மெகா சோலார் லிமிடெட் இடையே கையெழுத்தான இந்த ஒப்பந்தம், நிலையான எரிசக்தி ஒருங்கிணைப்பை நோக்கிய ஒரு குறிப்பிடத்தக்க படியைக் குறிக்கிறது.
விநியோகம் நிலையானதாக இருந்தால், காற்றாலை மற்றும் அணுசக்தி உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க எரிசக்தியை கூடுதலாக வாங்க ரயில்வே தயாராக இருப்பதாக அஸ்வினி வைஷ்ணவ் மீண்டும் உறுதிப்படுத்தினார்.
மற்ற மாநிலங்களுடனும் இதேபோன்ற ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவதற்கு தயாராக இருப்பதாகவும் அவர் கூறினார்.