வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல்: அரபிக்கடலுக்கு போர்க்கப்பல்களை அனுப்பிய இந்தியா
அரபிக் கடல் பகுதியில் வர்த்தக கப்பல் மீதான தாக்குதல்களைத் தொடர்ந்து, அப்பகுதியில் ரோந்து பணிகளை அதிகப்படுத்த 5 போர்க்கப்பல்களை அனுப்பியுள்ளதாக இந்திய கடற்படை தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் பாலஸ்தீன போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஆதரவாக, ஈரான் ஆதரவு பெற்ற பல போராளி குழுக்கள் வர்த்தக கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தி வருகின்றன. கடந்த வாரத்தின் இறுதியில், இந்தியாவிற்கு வந்து கொண்டிருந்த கப்பல் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. இந்நிலையில், இந்த தாக்குதல்களை கட்டுப்படுத்தும் நோக்கிலும், வர்த்தக கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காகவும், இந்திய கடற்படை 5 அதிநவீன போர் கப்பல்களை அரபிக் கடலுக்கு அனுப்பி வைத்துள்ளது.
எந்தக் கப்பல் எங்கு பணியமர்த்தப்பட்டுள்ளது?
இந்திய கடற்படைக்கு சொந்தமான ஐஎன்எஸ் கொல்கத்தா, ஐஎன்எஸ் கொச்சி, ஐஎன்எஸ் மோர்முகவோ, ஐஎன்எஸ் சென்னை மற்றும் ஐஎன்எஸ் விசாகப்பட்டினம் ஆகிய கப்பல்கள் அரபிக் கடல் பிராந்தியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் கொல்கத்தா செங்கடல் முகப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ஐஎன்எஸ் கொச்சி ஏமன் சொகோத்ரா தீவுக்கு தெற்கேயும், ஐஎன்எஸ் மோர்முகவோ மேற்கு அரபிக் கடலிலும், ஐஎன்எஸ் சென்னை மத்திய அரபிக்கடலிலும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளன. ஐஎம்எஸ் விசாகப்பட்டினம் வடக்கு அரேபிய கடலில் ரோந்து பணிக்காக இரண்டு நாட்களுக்கு முன்னர், வர்த்தக கப்பல் தாக்குதலுக்குள்ளான போதே அனுப்பி வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. மேலும், ராணுவ கப்பல்களுக்கு எரிபொருள் வழங்குவதற்காக, எம்வி ஸ்வர்ணமாலா என்ற 25,000 டன் எண்ணெய் டேங்க்கரை, இந்திய ராணுவம் பயன்படுத்தி வருகிறது.
வான் பரப்பிலிருந்தும் கண்காணிப்பு
ஏவுகணை தாக்குதல், கடற்கொள்ளை ஆகியவற்றில் இருந்து இந்திய கடற்படை கப்பல்கள் பாதுகாப்பை வழங்கும் அதே சமயத்தில், போயிங் பி 8 I மல்டி-மிஷன் விமானம் மற்றும் நீண்ட தூரம் செல்லும் சீ கார்டியன் ட்ரோன் ஆகியவை அரபிக் கடலின் ஏடன் வளைகுடா வரை, ஏமனின் ஷியா ஹூதிகள், ஈராக்கின் ஷியா கைதாப் ஹிஸ்புல்லா ஆகிய குழுக்களின் நடமாட்டத்தை கண்காணித்து வருகிறது. பிரான்ஸ், பிரிட்டிஷ் உள்ளிட்ட நாடுகளை உள்ளடக்கிய அமெரிக்க கூட்டணி, செங்கடல் பகுதியில் ரோந்து பணிகளை மேற்கொண்டு வரும் நிலையில், அரபிக் கடலில் ஏற்படும் அச்சுறுத்தல்களை சமாளிக்க இந்தியா போர்க்கப்பலைகளை அனுப்பியுள்ளது குறிப்பிடத்தக்கது.