இந்திய மருத்துவ பட்டதாரிகள் இப்போது அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடாவில் பயிற்சி பெறலாம்
இந்தியாவின் தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி), மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பு (WFME) அங்கீகார நிலையை 10 வருட காலத்திற்கு வழங்கியுள்ளது என்று மத்திய சுகாதார அமைச்சகத்தின் செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. WFME அங்கீகாரம், இந்திய மருத்துவ பட்டதாரிகளுக்கு அமெரிக்கா, கனடா, ஆஸ்திரேலியா மற்றும் நியூசிலாந்து போன்ற WFME அங்கீகாரம் தேவைப்படும் பிற நாடுகளில், முதுகலை பயிற்சியைத் தொடர உதவும். இந்த நடவடிக்கையின் கீழ், தற்போதுள்ள செயல்பட்டிலுள்ள 706 இந்திய மருத்துவக் கல்லூரிகள் WFME அங்கீகாரம் பெறும். வரும் 10 ஆண்டுகளில் அமைக்கப்படும் புதிய மருத்துவக் கல்லூரிகள் தானாகவே WFME அங்கீகாரம் பெறும். இதன் மூலமாக, நமது கல்வியின் தரம் உலகத்தரத்தில் உள்ளதென, பல வெளிநாட்டு மாணவர்கள் இந்தியாவை நோக்கி பயணிக்க வாய்ப்புள்ளது.
WFME அங்கீகாரம்
மருத்துவக் கல்விக்கான உலகக் கூட்டமைப்பு (WFME) என்பது உலகளவில் மருத்துவக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு உலகளாவிய அமைப்பாகும். முன்னர், இந்த WFME அங்கீகாரத்தை பெறுவதற்கு ஒரு மருத்துவக் கல்லூரி ₹ 4,98,5142 ($60,000) கட்டணம் செலுத்த வேண்டும். அங்கீகாரம் வழங்க வருகை தரவிருக்கும் குழுவின் செலவுகள் மற்றும் அவர்களின் பயணம் மற்றும் தங்குமிடம் போன்ற செலவுகள் தனி. அதாவது இந்தியாவில் உள்ள 706 மருத்துவக் கல்லூரிகள் WFME அங்கீகாரத்திற்கு விண்ணப்பிப்பதற்கான மொத்தச் செலவு தோராயமாக ₹ 351.9 கோடி ($4,23,60,000) இருந்திருக்கும். தற்போது NMC அதன் குடையின் கீழ் உள்ள அனைத்து மருத்துவக் கல்லூரிகளுக்கும், WFME க்கு அங்கீகாரம் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.