
கனடாவின் காலிஸ்தான் நெட்வொர்க்; ஆதாரங்களை அம்பலப்படுத்திய இந்திய புலனாய்வு அமைப்புகள்
செய்தி முன்னோட்டம்
தடை செய்யப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாத அமைப்புகளுடன் நெருக்கமாக இணைந்து செயல்படும் பல கனடா நாட்டினரை அடையாளம் கண்டு, அவர்களின் பயங்கரவாத நெட்வொர்க்கை இந்திய புலனாய்வு அமைப்புகள் வெளிப்படுத்தியுள்ளன.
கொல்லப்பட்ட காலிஸ்தானி தீவிரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜாருக்கு இந்தியாவிலும் கனடாவிலும் உள்ள தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்பு குறித்து இந்திய அதிகாரிகள் தயாரித்த ஆவணத்தில் இருந்து இந்த விவரங்கள் வெளிவந்துள்ளதாக கூறப்படுகிறது.
கனடாவில் நிஜ்ஜாரை இந்தியா கொன்றதாக கூறி, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் விரிசல் ஏற்படுவதாக கனடா குற்றம் சாட்டியது குறிப்பிடத்தக்கது.
2014க்குப் பிறகு காலிஸ்தான் பயங்கரவாதிகள் கனடாவில் தஞ்சம் புகுந்தது பற்றிய தகவல்களுடன் இந்தியப் பாதுகாப்பு ஏஜென்சிகள் கனடா பாதுகாப்பு அமைப்புகளை அணுகியபோது, அவை இந்தியாவில் இருந்து உளவுத்தகவல்களை பெற மறுத்ததாகக் கூறப்படுகிறது.
Indian security agencies reveals khalistan network
பலமுறை கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்காத கனடா
கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ 2018 ஆம் ஆண்டு இந்தியாவிற்கு வந்தபோது, பஞ்சாபின் அப்போதைய முதல்வர் அமரீந்தர் சிங், நிஜ்ஜார் உட்பட வழக்கிலிருந்து கனடா தப்பியோடிய 10 பயங்கரவாதிகளின் பட்டியலை அவரிடம் கொடுத்தார்.
2014ல் நிஜ்ஜாருக்கு எதிராக இன்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ் பிறப்பித்த போதிலும், கனடா அவருக்கு எதிராக எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை.
குறைந்தது ஒன்பது பிரிவினைவாத அமைப்புகள் கனடாவில் தங்கள் தளங்களைக் கொண்டிருப்பதாக இந்திய அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்திய அதிகாரிகள் தயாரித்த ஆவணத்தில் நிஜ்ஜார் மட்டுமல்லாது, தடைசெய்யப்பட்ட குழுவான சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் நிறுவனர் குர்பத்வந்த் சிங் பன்னுன், குர்ஜித் சிங் சீமா உள்ளிட்ட பலரது தொடர்புகள் குறித்தும் அம்பலப்படுத்தியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.