அதானி குழும பிரச்சனை: செய்தியாளர் சந்திப்பில் பேசிய ரிசர்வ் வங்கி கவர்னர்
அதானி குழுமத்தின் பிரச்சனைகளை குறிப்பிட்டு பேசும் போது, இந்திய வங்கிகளின் வலிமை மற்றும் அளவு தற்போது அதிகமாக உள்ளது. அதனால், வங்கிகள் "இது போன்ற ஒரு பிரச்சனையால் பாதிக்கப்படாது" என்று ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் இன்று(பிப் 8) கூறியுள்ளார். அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை, அதானி குழுமத்தைப் பற்றி வெளியிட்ட எதிர்மறை அறிக்கையால் அதானி குழுமத்தின் பங்குகள் வெகுவாக சரிவடைந்துள்ளது. SBI, LIC போன்ற பொதுத்துறை நிறுவனங்கள் அதானி பங்குகளில் முதலீடு செய்திருப்பதால், அந்த நிறுவனங்களும் பாதிக்கப்படும் என்று கூறப்பட்டது. அதற்கு பதிலளித்த ரிசர்வ் வங்கி கவர்னர் சக்திகந்த தாஸ் பின்வருமாறு கூறியுள்ளார்.
ரிசர்வ் வங்கி கவர்னர் மற்றும் துணை கவர்னர் கூறியதாவது:
இந்திய வங்கிகளின் வலிமை மற்றும் அளவு அதிகமாக இருப்பதால், அது இப்படி ஒரு பிரச்சனையால் பாதிக்கப்படாது என்று ரிசர்வ் வங்கி கவர்னர் கூறியுள்ளார். அவர் இதை கூறும் போது அதானி பங்குகள் என்று குறிப்பிட்டு பேசவில்லை. அதானி குழும நிறுவனங்களால் இந்திய வங்கிகள் பாதிப்படும் என்ற செய்திகள் வெளியாகி உள்ளதே அதை சமாளிக்க ரிசர்வ் வங்கி ஏதாவது வழிகாட்டுதலைகளை வழங்கி இருக்கிறதா என்ற கேள்விக்கு பதிலளிக்கும் போது அவர் இதை பேசி இருக்கிறார். துணை கவர்னர் எம்.கே.ஜெயின் பேசும் போது, அதானி குழுமத்தால் இந்திய வங்கிகள் பாதிக்கப்படும் என்பது சாத்தியம் இல்லாத ஒன்று என்றும், பங்குகள் பாதிக்கபடுவது மிகவும் "சிறிய" அளவில் மட்டுமே இருக்கும் என்றும் கூறியுள்ளார்.