அதானி நிறுவன பிரச்சனை: நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளும் ஒத்திவைப்பு
பங்குச் சந்தை சரிவுக்கு வழிவகுத்த அதானி நிறுவனத்தைப் பற்றிய விவாதம் மற்றும் விசாரணைக்கு அழைப்பு விடுப்பதில் எதிர்க்கட்சிகள் உறுதியாக இருந்ததால், இரு நாடாளுமன்ற அவைகளும் இன்று(பிப் 3) எந்த வேலையும் இல்லாமல் ஒத்திவைக்கப்பட்டன. விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் நேற்று முன்கூட்டியே ஒத்திவைக்கப்பட்டன. இந்நிலையில், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவின் அறையில் 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்களும் மீண்டும் ஒருமுறை இன்று கூடினர். அமெரிக்காவின் ஹிண்டன்பர்க் ரிசர்ச் அறிக்கை, அதிக கடன் வைத்திருக்கும் நிறுவனம் என்றும் வரி செலுத்துவதில் இருந்து தப்பிக்க "வரி ஏமாற்று புகலிடங்களை" பயன்படுத்தும் நிறுவனம் என்றும் அதானி குழுமத்தை விமர்சித்திருந்தது. இந்த விமர்சனங்களுக்கு பின், அதானி குழுமத்தின் பங்குகள் வெகுவாக வீழ்ச்சி அடைந்து வருகிறது.
அதானி குழும பிரச்சனையைப் பற்றி விவாதிக்க மறுப்பு
இதனால் ஏற்படும் பொருளாதார பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க எதிர்க்கட்சிகள் கோரிக்கை விடுத்து வருகின்றன. மேலும், இதை விசாரிக்க நாடாளுமன்றக் குழு அல்லது உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழு அமைக்கப்பட வேண்டும் என்றும் அவர்கள் கோரி வருகின்றனர். அதானி குழுமத்தின் மிகப்பெரும் முதலீட்டாளர்களான அரசாங்கத்தால் நடத்தப்படும் LIC மற்றும் SBIயில் முதலீடு செய்திருப்பவர்களும் இதனால் பாதிப்படைய வாய்ப்பிருக்கிறது என்பதால் இந்த விவாதம் மிக முக்கியமானது என்கின்றன எதிர்க்கட்சிகள். ஆனால், மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா, அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து, "ஆதாரமற்ற கூற்றுக்களை கூற வேண்டாம்" என்று கேட்டுக்கொண்டார். மாநிலங்களவை தலைவரும், துணை ஜனாதிபதியுமான ஜகதீப் தன்கர், எதிர்க்கட்சிகளின் அனைத்து தீர்மானங்களும் "சரியாக இல்லை" என்று கூறி நிராகரித்திருக்கிறார்.