இந்திய ராணுவ தினம் 2026: போர் முனையைத் தாண்டி ராணுவம் செய்யும் முக்கிய பணிகள்
செய்தி முன்னோட்டம்
இந்தியா வியாழக்கிழமை (ஜனவரி 15) தனது தேசிய ராணுவ தினத்தைக் கொண்டாடுகிறது. 1949 ஆம் ஆண்டு இதே நாளில், ஜெனரல் கே.எம்.கரியப்பா இந்திய ராணுவத்தின் முதல் தலைமைத் தளபதியாகப் பொறுப்பேற்றதை நினைவுகூரும் வகையில் இந்தத் தினம் கடைபிடிக்கப்படுகிறது. ராணுவம் என்றாலே எல்லைப் பாதுகாப்பு மற்றும் போர் மட்டுமே நம் நினைவுக்கு வரும். ஆனால், வெளிச்சத்திற்கு வராத பல மனிதாபிமான பணிகளை அவர்கள் அமைதியாகச் செய்து வருகின்றனர். அவற்றை இதில் விரிவாகப் பார்க்கலாம்.
பேரிடர் மீட்பு
பேரிடர் காலங்களில் முதல் மீட்புப் படை
வெள்ளம், நிலநடுக்கம் அல்லது புயல் என எதுவாக இருந்தாலும், சிவில் நிர்வாகம் நிலைகுலையும் போது முதலில் களமிறங்குவது ராணுவம்தான். ஹெலிகாப்டர்கள், மருத்துவக் குழுக்கள் மற்றும் பொறியியல் நிபுணர்களுடன் அவர்கள் விரைந்து வந்து மீட்புப் பணிகளை முன்னெடுக்கின்றனர். எத்தனையோ உயிரிழப்புகளைத் தடுத்து நிறுத்துவதில் அவர்களின் வேகம் மற்றும் ஒழுக்கம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது. பேரிடர் காலங்களில் மனிதர்களைக் காப்பாற்றுவது போலவே, கால்நடைகளையும் பாதுகாப்பதில் ராணுவம் கவனம் செலுத்துகிறது. பல பகுதிகளில் கால்நடை மருத்துவ முகாம்களை நடத்தி, விவசாயிகளின் வாழ்வாதாரமான ஆடு, மாடுகளைக் காப்பாற்ற அவர்கள் உதவுகிறார்கள்.
அண்டை நாடுகள்
அண்டை நாடுகளுக்கு மனிதாபிமான உதவி
இந்திய ராணுவம் இந்தியாவின் எல்லைக்குள் மட்டும் தனது சேவையை நிறுத்திக்கொள்வதில்லை. அண்டை நாடுகளில் நிலநடுக்கம் அல்லது மருத்துவ நெருக்கடி ஏற்படும் போது, மனிதாபிமான அடிப்படையில் முதலில் உதவிக்கரம் நீட்டுவது நமது ராணுவம்தான். இது எந்த ஒரு அரசியல் லாபத்திற்காகவும் அல்லாமல், மனிதநேயத்தை முன்னிறுத்திச் செய்யப்படுகிறது. இந்தியாவின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான தேர்தல்கள் நடக்கும்போது, குறிப்பாகப் பதற்றமான மற்றும் மலைப்பாங்கான பகுதிகளில் அமைதியை உறுதி செய்ய ராணுவ வீரர்கள் பணியமர்த்தப்படுகின்றனர். வாக்குப்பதிவு நியாயமாகவும், பாதுகாப்பாகவும் நடப்பதை அவர்கள் உறுதி செய்கிறார்கள். எவ்வித விளம்பரமும் இன்றி இந்தத் கடமையை அவர்கள் மிக நேர்த்தியாகச் செய்கிறார்கள்.
உள்கட்டமைப்பு
எல்லைப் பகுதிகளில் உள்கட்டமைப்பு வசதிகள்
இந்தியாவின் மிகவும் பின் தங்கிய மற்றும் கரடுமுரடான மலைப் பகுதிகளில் உள்ள சாலைகள், பாலங்கள் மற்றும் விமானத் தளங்கள் பலவும் ராணுவத்தின் கடின உழைப்பால் உருவானவை. இவை ராணுவப் போக்குவரத்துக்காக மட்டுமல்லாமல், அந்தப் பகுதியில் வசிக்கும் மக்களின் வாழ்வாதாரத்தை இணைக்கவும், அவர்களுக்கு மருத்துவ வசதிகளைக் கொண்டு செல்லவும் உதவுகின்றன.