'ஊழல், ஜாதி, வகுப்புவாதம் ஆகியவற்றுக்கு இந்தியாவில் இடமில்லை': பிரதமர் மோடி
சுதந்திரம் அடைந்து 100வது ஆண்டு விழாவை கொண்டாடும் போது, இந்தியா வளர்ந்த நாடாக இருக்கும் என்றும், இந்தியாவில் ஊழல், சாதிவெறி மற்றும் வகுப்புவாதத்திற்கு இடமில்லை என்றும் பிரதமர் நரேந்திர மோடி பிடிஐ செய்தி நிறுவனத்திற்கு இன்று பேட்டியளித்துள்ளார். 2047-ம் ஆண்டுக்குள் இந்தியா வளர்ந்த நாடாக மாறும்; ஊழல், ஜாதிவெறி, வகுப்புவாதம் ஆகியவை நமது தேசிய வாழ்வில் இடம் பெறாது என்று பிரதமர் கூறியுள்ளார். அதன் பிறகு, புது டெல்லியில் நடைபெறவிருக்கும் ஜி20 உச்சிமாநாடு குறித்துப் பேசிய பிரதமர் மோடி, வழிகாட்டுதலுக்காக உலகம் தற்போது இந்தியாவை எதிர்நோக்குகிறது என்று கூறினார்.
'இரண்டு பில்லியன் திறமையானவர்களை கொண்ட நாடு இந்தியா': பிரதமர் மோடி
மேலும், மொத்த உள்நாட்டு உற்பத்தியை மையமாக கொண்டிருந்த உலகத்தின் பார்வை, தற்போது மனிதனை மையமாகக் கொண்டதாக மாறி வருகிறது. இந்த மாற்றத்தில் இந்தியா ஒரு ஊக்கியாக செயல்படுகிறது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். இந்தியாவைப் பற்றிய உலகின் பார்வை எவ்வாறு மாறுகிறது என்பதை விளக்கிய பிரதமர் மோடி, "நீண்ட காலமாக இந்தியா என்பது ஒரு பில்லியன் பசியுள்ள வயிறுகளைக் கொண்ட நாடாகக் கருதப்பட்டது. தற்போது, இந்தியா, ஒரு பில்லியன் சாதனையாளர்களையும் இரண்டு பில்லியன் திறமையானவர்களையும் கொண்ட நாடாக பார்க்கப்படுகிறது" என்று கூறியுள்ளார். "அடுத்த 1,000 ஆண்டுகளுக்கு நினைவில் நிற்கும் வளர்ச்சிக்கான அடித்தளத்தை அமைக்க இன்று இந்தியர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பு உள்ளது," என்றும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.