ராணுவ பலத்தை அதிகரிக்க புதிதாக 31 நவீன ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கும் இந்தியா
அடுத்த மாதம் மார்ச் மாதத்திற்குள் 31 'MQ-9B' வகை பறக்கும் பாதுகாப்பு ட்ரோன்களை வாங்குவதற்கு, அமெரிக்காவுடன் இந்தியா ஒப்பந்தம் செய்து கொள்ளவிருப்பதாகத் தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த ஒப்பந்தத்திற்கு வரும் வாரங்களில அமெரிக்க காங்கிரஸ் ஒப்புதல் அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா ராணுவத்தின் கண்காணிப்புத் திறனையும், ஆளில்லா தாக்குதல் திறனையும் மேம்படுத்துவதற்காக இந்த வகையான ட்ரோன்களை அமெரிக்காவிடமிருந்து வாங்கத் திட்டமிட்டிருக்கிறது இந்தியா. இந்த ட்ரோன்களை முக்கியமாக இந்திய, சீன எல்லையான LAC (Line of Actual Control) பகுதியில் பயன்படுத்தவும் இந்தியா ராணுவம் திட்டமிட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்த ட்ரோன்களை வாங்குவதற்காக தற்போது அமெரிக்காவின் பாதுகாப்பு உபகரணத் தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் அடாமிக்ஸ் நிறுவனத்திடம் கோரிக்கை எழுப்பியிருக்கிறது இந்தியா.
திறன் வாய்ந்த MQ-9B ட்ரோன்:
இந்தியாவின் கோரிக்கைக்கு அமெரிக்க அரசு ஒப்புதல் அளித்தபின்பு, ஒப்பந்தம் குறித்த இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தைகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 3 பில்லியன் டாலர்கள் மதிப்பில் புதிய ட்ரோன்கள் வாங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இறுதிக்கட்டப் பேச்சுவார்த்தையின் போது முழுமையான மதிப்பு நிர்ணயிக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 35 மணி நேரம் வரை வானில் இடைநில்லாமல் செயல்படக்கூடிய இந்த ட்ரோன்களானது, தாக்குதலுக்காக நான்கு ஏவுகணைகள் மற்றும் 450 கிலோ வெடிபொருட்களையும் கொண்டிருக்குமாம். முன்னதாக, 2020ம் ஆண்டு இந்த ட்ரோன்களில் இரண்டை இந்தியப் பெருங்கடலின் கண்காணிப்புப் பணிகளுக்காக ஒரு ஆண்டுக்கு குத்தகைக்கு எடுத்திருந்தது இந்தியா. இந்த 31 ட்ரோன்களில், கப்பற்படைக்கு 15 ட்ரோன்களும், விமானப் படை மற்று ராணுவத்திற்கு தலா 8 ட்ரோன்களும் வழங்கப்படவிருப்பது குறிப்பிடத்தக்கது.