Loading...
ஜிசாட்-7சி ராணுவ செயற்கைக்கோள்: இந்திய விமானப்படைக்கு ₹2,563 கோடி ஒப்பந்தம்
இந்திய விமானப்படைக்கு ஜிசாட்-7சி ராணுவ செயற்கைக்கோள் வாங்க ₹2,563 கோடி ஒப்பந்தம்

ஜிசாட்-7சி ராணுவ செயற்கைக்கோள்: இந்திய விமானப்படைக்கு ₹2,563 கோடி ஒப்பந்தம்

எழுதியவர் Sekar Chinnappan
Oct 16, 2026
07:32 pm

செய்தி முன்னோட்டம்

இந்திய விமானப்படையின் வான்வழி செயல்பாடுகள் மற்றும் பாதுகாப்பான தகவல் தொடர்பு நெட்வொர்க்கை மேலும் வலுப்படுத்தும் வகையில், மத்திய பாதுகாப்பு அமைச்சகம் ஜிசாட்-7சி என்ற பிரத்யேக ராணுவ செயற்கைக்கோளை உருவாக்க ₹2,563 கோடி மதிப்பில் புதிய ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளது. புதுடெல்லியில் நடைபெற்ற நிகழ்வில், இஸ்ரோவின் வர்த்தக அமைப்பான நியூஸ்பேஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்துடன் இந்த ஒப்பந்தம் அதிகாரப்பூர்வமாகக் கையெழுத்தானது. கூடுதல் விபரங்கள் இங்கே:-

தொழில்நுட்பம்

உள்நாட்டுத் தொழில்நுட்பமும் தகவல் தொடர்பு ஆற்றலும்

பிரதமரின் ஆத்மநிர்பர் பாரத் தொலைநோக்குப் பார்வையின் கீழ், இந்த செயற்கைக்கோள் முழுமையாக இந்தியாவிலேயே வடிவமைக்கப்பட்டுத் தயாரிக்கப்படவுள்ளது.

ஜிசாட்-7சி செயற்கைக்கோள் மூலம் இந்திய விமானப்படையின் போர் விமானங்கள், வான்வழி எச்சரிக்கை மற்றும் கட்டுப்பாட்டு அமைப்புகள், ஆளில்லா விமானங்கள் மற்றும் தரைக்கட்டுப்பாட்டு நிலையங்களுக்கு இடையே உயர் பாதுகாப்புடன் கூடிய, நவீன மற்றும் தடையில்லாத் தகவல் தொடர்பு இணைப்பு சாத்தியமாகும்.

எதிரி நாடுகளின் ரேடார்கள் அல்லது ஜாமர்களால் இந்த தகவல்களை ஊடுருவ முடியாது.

வருணாஸ்த்ரா

கடற்படைக்கு வருணாஸ்த்ரா டார்பிடோ ஒப்பந்தம்

பாதுகாப்பு அமைச்சகம் மேற்கொண்ட ஒட்டுமொத்த ₹4,106 கோடி அளவிலான ஒப்பந்தங்களில், இந்தியக் கடற்படைக்கான நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்த்தளவாடங்களும் அடங்கும்.

இதன்படி, பாரத் டைனமிக்ஸ் லிமிடெட் நிறுவனத்திடமிருந்து ₹1,543 கோடி செலவில் வருணாஸ்த்ரா ரக ஹெவி-வெயிட் டார்பிடோக்களை வாங்கவும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

கப்பல்களில் இருந்து ஏவப்படும் இந்த டார்பிடோக்கள், எதிரி நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை மிக நீண்ட தூரத்தில் இருந்தே துல்லியமாகத் தாக்கி அழிக்கும் திறன் கொண்டவையாகும்.

ADVERTISEMENT

முப்படைப் பாதுகாப்பு

முப்படைப் பாதுகாப்பில் எட்டப்பட்டுள்ள முக்கிய மைல்கல்

ஏற்கனவே இந்திய கடற்படை ருக்மணி (GSAT-7) செயற்கைக்கோளையும், இந்திய ராணுவம் ஜிசாட்-7பி செயற்கைக்கோளையும் பயன்படுத்தி வரும் நிலையில், தற்போது விமானப்படைக்கென பிரத்யேகமாக ஜிசாட்-7சி இணையவுள்ளது.

ஒரே நாளில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த இரு பிரம்மாண்ட பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மூலம், நாட்டின் வான்வெளி மற்றும் கடல்சார் எல்லைப் பாதுகாப்புகள் அதிநவீனத் தொழில்நுட்பங்களுடன் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக ராணுவ வல்லுநர்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

ADVERTISEMENT