உலக பால் உற்பத்தியில் இந்தியா 33% பங்களிக்க வேண்டும்: அமித் ஷா
2033-34 ஆம் ஆண்டிற்குள் உலகளாவிய பால் உற்பத்தியில் இந்தியா 33 சதவீதம்(330 மில்லியன் மெட்ரிக் டன்) பங்களிக்க வேண்டும் என்று மத்திய கூட்டுறவு அமைச்சர் அமித் ஷா இன்று(மார் 18) தெரிவித்தார். இந்த இலக்கை அடைய மத்திய, மாநில அரசுகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் இணைந்து செயல்பட வேண்டும் என்று இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த 49வது பால் பண்ணை தொழில் மாநாட்டில் அமித் ஷா கூறினார். இரண்டு லட்சம் புதிய முதன்மை பால் உற்பத்திக் குழுக்கள் (பஞ்சாயத்து அளவில்) அமைக்கப்பட்டால், வரும் ஆண்டுகளில், இது சாத்தியப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
49வது பால் பண்ணை தொழில் மாநாட்டில் அமித்ஷா கூறியதாவது:
உலகின் மிகப்பெரிய பால் உற்பத்தியாளர் என்பதையும் தாண்டி, பால் பதப்படுத்தும் கருவிகளின் மிகப்பெரிய ஏற்றுமதியாளராக இந்தியா மாற வேண்டும். கடந்த ஒரு தசாப்தத்தில், பால்வளத் துறை, ஆண்டுக்கு 6.6 சதவீதம் என்ற விகிதத்தில் வளர்ச்சியடைந்துள்ளது. நாம் உற்பத்தி செய்யும் பாலில் 22 சதவீதம் பதப்படுத்தப்படுகிறது. பதப்படுத்தப்பட்டு சந்தையில் விற்கப்படும் பாலுக்கு ஏற்ப விவசாயிகளின் வருமானம் உயர்கிறது. பால் பவுடர், நெய் மற்றும் வெண்ணெய் போன்ற பால் பொருட்களின் ஏற்றுமதியை தீர்மானிக்கும் காரணியாக பால்வள துறை மாறியுள்ளது. ஏற்றுமதிக்காக உருவாக்கப்பட்ட பல்வேறு மாநிலங்களின் கூட்டுறவு சங்கம், இரண்டு லட்சம் பால் சங்கங்களுடன் இணைக்கப்படும் நாளில், நமது ஏற்றுமதி ஐந்து மடங்கு உயர வாய்ப்புள்ளது. என்று அவர் கூறியுள்ளார்.