'அக்னி பிரைம்' ஏவுகணையின் இரவு நேர சோதனை வெற்றி பெற்றது
2,000 கிமீ தொலைவு வரை அணு ஆயுதங்களை அனுப்பும் திறன் கொண்ட புதிய பாலிஸ்டிக் ஏவுகணையை இந்தியா அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஏவுகணைக்கு 'அக்னி பிரைம்' என்று பெயரிடப்பட்டுள்ளது. ஒடிசா கடற்கரையில் உள்ள டாக்டர் ஏபிஜே அப்துல் கலாம் தீவில் அக்னி பிரைம் ஏவுகணையின் முக்கியமான ஏவுகணை சோதனை கடந்த புதன்கிழமை நடைபெற்றதாக பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த ஏவுகணை சோதனை அக்னி பிரைம் ஆயுத அமைப்பின் துல்லியம் மற்றும் நம்பகத்தன்மையை உறுதிப்படுத்தியது என்று பாதுகாப்பு அமைச்சகம் கூறி இருக்கிறது. ஏற்கனவே மூன்று வெற்றிகரமான பகல்நேர சோதனைகள் முடிவடைந்திருந்த நிலையில், தற்போது இரவு நேர சோதனையும் வெற்றி பெற்றுள்ளது.
இது இந்தியாவின் பாதுகாப்பை வலுப்படுத்தும்: பாதுகாப்பு அமைச்சகம்
1,000 கி.மீ முதல் 2,000 கி.மீ தூரம் வரை சென்று தாக்கும் திறன் கொண்ட இந்த கேனிஸ்டர் ஏவுகணையை, மிக குறுகிய அறிவிப்பில் ஏவ முடியும். இந்த ஏவுகணையில் பொருத்தப்பட்டுள்ள உந்துவிசை அமைப்பு, வழிகாட்டுதல் அமைப்பு மற்றும் கட்டுப்பாட்டு அமைப்பு ஆகியவை மிகவும் மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பங்களால் உருவாக்கப்பட்டதாகும். 700-கிமீ வரம்பு வரை சென்று தாக்கும் அக்னி-I, 2,000-கிமீ வரம்பு வரை சென்று தாக்கும் அக்னி-II, 3,000-கிமீ வரம்பு வரை சென்று தாக்கும் அக்னி-III, 4,000-கிமீ வரம்பு வரை சென்று தாக்கும் அக்னி-IV மற்றும் 5,000-கிமீ வரம்பு வரை சென்று தாக்கும் அக்னி-V ஆகிய ஏவுகணைகள் டிஆர்டிஓ உருவாக்கிய அக்னி ஏவுகணைகளின் பிற வகைகளாகும்.