2025இல் சென்சஸ் கணக்கெடுப்பு தொடக்கம்; 2028க்குள் எம்பி தொகுதி மறுவரையறை செய்ய மத்திய அரசு திட்டம்
மத்திய அரசு நான்கு வருட தாமதத்திற்குப் பிறகு 2025 இல் அடுத்த மக்கள்தொகை கணக்கெடுப்பை (சென்சஸ்) நடத்த உள்ளது என்று தகவல் அறிந்த வட்டாரங்களில் இருந்து தகவல் வெளியாகியுள்ளது. பாரம்பரியமாக ஒவ்வொரு பத்து வருடங்களுக்கு ஒருமுறை நடத்தப்படும் சென்சஸ், கொரோனா தொற்றுநோய் காரணமாக அதன் அசல் 2021 அட்டவணையில் இருந்து ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், வரவிருக்கும் மக்கள் தொகை கணக்கெடுப்பு செயல்முறை 2025இல் தொடங்கி 2026 வரை நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் முடிவுகளுக்கு பிறகு, 2028 க்குள் மக்களவை தொகுதி மறுவரையறை செய்யப்படும் எனத் தெரிகிறது. இந்த மறுவரையறையில் மக்களவை தொகுதிகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் நிலையில், 2029இல் இந்த புதிய மக்களவை தொகுதிகளுடன் தேர்தல் நடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மக்கள்தொகை கணக்கெடுப்பு விபரங்கள்
மக்கள்தொகை கணக்கெடுப்பில் மதம், சமூக வகுப்புகள் மற்றும் பட்டியலினத்தவர் மற்றும் பழங்குடியினர் (எஸ்சி/எஸ்டி) பற்றிய நிலையான மக்கள்தொகை தரவுகள் இருக்கும் என்று கூறப்படுகிறது. அதே நேரத்தில் பொது மற்றும் எஸ்சி/எஸ்டி வகைகளுக்குள் சாத்தியமான புதிய வகைப்பாடுகளும் பரிசீலனையில் உள்ளன. எனினும், ஜாதி அடிப்படையிலான மக்கள்தொகை கணக்கெடுப்புக்கான விவரங்களை அரசாங்கம் இன்னும் உறுதிப்படுத்தவில்லை. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இதுகுறித்து கூறுகையில், தரவு சேகரிப்பை நவீனப்படுத்த மொபைல் செயலியைப் பயன்படுத்தி, மக்கள் தொகை கணக்கெடுப்பு முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்படும் என்று கூறினார். அரசாங்கம் இன்னும் விரிவான காலக்கெடுவை வெளியிடவில்லை என்றாலும், மக்கள்தொகை கணக்கெடுப்பு பொருத்தமான நேரத்தில் தொடங்கும் என்று அவர் கடந்த ஆகஸ்ட் மாதம் உறுதிப்படுத்தினார்.