தன்பாலின ஈர்ப்புப்பாளர் நீதிபதியாவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு
தன்பாலின ஈர்ப்புப்பாளராக இருப்பதால் சவுரப் கிர்பால் என்ற வழக்கறிஞர், உயர்நீதிமன்ற நீதிபதியாவதற்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது. மத்திய அரசின் இந்த வாதத்தை வெளியிட்ட உச்சநீதிமன்ற கொலீஜியம், அதை நிராகரித்திருக்கிறது. மூத்த வழக்கறிஞர் சவுரப் கிர்பால் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால் அவரே நாட்டின் முதல் 'தன்பாலின ஈர்ப்பாளர்' நீதிபதியாக இருப்பார். சௌரப் கிர்பால், சோமசேகர் சுந்தரேசன், ஆர் ஜான் சத்யன் ஆகிய 3 மூன்று பேரின் பதவி உயர்வுக்கு மத்திய அரசு ஆட்சேபனை தெரிவித்திருந்த தகவலை உச்சநீதிமன்றம் இணையதளத்தில் வெளியிட்டது. விதிகளின்படி, இரண்டு முறை ஒரே நபரை உச்ச நீதிமன்ற கொலீஜியம் பரிந்துரைத்தால் அதை மத்திய அரசு ஏற்க வேண்டும் என்பதும் அதில் குறிப்பிடப்பட்டிருந்தது.
இந்தியாவின் முதல் தன்பாலின ஈர்ப்பு கொண்ட நீதிபதி
கிர்பால் பிரச்சனையில், அரசாங்கம் கூறியிருந்த இரண்டு காரணங்களையும் நீதிமன்றம் நிராகரித்துள்ளது. மத்திய அரசு கூறியிருந்த முதல் ஆட்சேபனையில், கிர்பாலின் பாலீர்ப்பைப் பற்றி குறிப்பிடப்பட்டிருந்தது. இரண்டாம் ஆட்சபனையில், கிர்பாலின் துணைவர் சுவிட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர், அதனால் பாதுகாப்பு பிரச்சனை வரலாம் என்று கூறப்பட்டிருந்தது. இந்த இரண்டையும் நிராகரித்த உச்ச நீதிமன்ற கொலீஜியம், மத்திய அரசின் கருத்துக்கள் "அரசியலமைப்புக் கொள்கைகளுக்கு வெளிப்படையாக முரணானது" என்று தெரிவித்திருக்கிறது. மேலும், பல அரசியலமைப்புச் செயல்பாட்டாளர்கள் வெளிநாட்டு குடிமக்களை வாழ்க்கைத் துணையாகக் கொண்டிருப்பதைக் கொலீஜியம் சுட்டிக்காட்டி இருக்கிறது. இதையடுத்து, மூன்றாவது முறையாக டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதி பதவிக்கு கிர்பாலை கொலீஜியம் பரிந்துரைத்திருக்கிறது. இது ஏற்றுக்கொள்ளப்பட்டால், தன் பாலின ஈர்ப்பு கொண்ட ஒருவர் நீதிபதியாவது இந்தியாவில் இதுவே முதல்முறையாக இருக்கும்.