H3N2 இன்ஃப்ளூயன்ஸா காய்ச்சலால் இந்தியாவில் ஏற்பட்ட முதல் இறப்புகள்
H3N2 வைரஸினால் ஏற்பட்ட காய்ச்சலால் இரண்டு பேர் உயிரிழந்துள்ளதாக அரசாங்கம் இன்று(மார் 10) தெரிவித்துள்ளது. ஹரியானா மற்றும் கர்நாடகா மாநிலங்களில் தலா ஒருவர் உயிரிழந்துள்ளனர். கர்நாடக மாநிலம் ஹாசனில் உயிரிழந்த 82 வயது முதியவர் ஒருவரே H3N2 வைரசால் நாட்டிலேயே முதன்முதலாக உயிரிழந்தவர் என்று நம்பப்படுகிறது. ஹிரே கவுடா என்ற அந்த முதியவர் பிப்ரவரி 24 அன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு மார்ச் 1 அன்று உயிரிழந்தார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். நாட்டில் 90 பேர் H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். H1N1 வைரஸினால் எட்டு பேர் பாதிக்கப்பட்டுள்ளது கண்டறியப்பட்டது.
கொரோனா போல் பரவி வரும் H3N2 காய்ச்சல்
கடந்த சில மாதங்களாகவே நாட்டில் காய்ச்சல் பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன. பெரும்பாலான நோய்த்தொற்றுகள் H3N2 வைரஸால் ஏற்படுவதாக கண்டறியப்பட்டுள்ளது. இந்த வகையான காய்ச்சல் "ஹாங்காங் காய்ச்சல்" என்றும் அழைக்கப்படுகிறது. H3N2 வைரஸ் மற்ற துணை வகைகளைக் காட்டிலும் அதிகமாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு-மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் இது பரவி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். மற்ற இன்ஃப்ளூயன்ஸா துணை வகைகளை விட H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இந்தியாவில் இதுவரை H3N2 மற்றும் H1N1 தொற்றுகள் மட்டுமே கண்டறியப்பட்டுள்ளன. கொரோனா போலவே அறிகுறி காட்டும் இந்த காய்ச்சலினால் இருமல், காய்ச்சல், சளி, மூச்சுத்திணறல் போன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றன.