கொரோனா போல் பரவி வரும் H3N2 காய்ச்சல்: இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில்
இந்தியாவின் பல பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக அதிக காய்ச்சல் பரவி வருகிறது. கொரோனா போல பரவும் இந்த காய்ச்சலினால் மக்கள் மத்தியில் அச்சம் நிலவுகிறது. இந்தியா முழுவதும் அதிக எண்ணிக்கையிலான காய்ச்சல் பதிவாகி வருகின்றன. இது இன்ஃப்ளூயன்ஸா ஏ-வின் துணை வகை H3N2 வைரஸால் ஏற்படுவதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) தெரிவித்துள்ளது. H3N2 வைரஸ் மற்ற துணை வகைகளைக் காட்டிலும் அதிகமாக பரவுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு-மூன்று மாதங்களாக இந்தியா முழுவதும் இது பரவி வருவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். காய்ச்சல் மற்றும் இருமல், இதன் முக்கிய அறிகுறிகளாக பார்க்கப்படுகிறது. சமீபகாலமாக இதன் அறிகுறிகள் நீண்ட நாட்கள் இருப்பதாக கூறப்படுகிறது.
அதிகமாக ஆண்டிபயாடிக் கொடுக்க வேண்டாம்: இந்திய மருத்துவ சங்கம்
"தொற்று குணமடைய நேரம் எடுக்கிறது. அறிகுறிகள் வலுவாக இருக்கின்றன. நோயாளி குணமடைந்த பிறகும், அறிகுறிகள் நீண்ட காலத்திற்கு நீடிக்கும்" என்கிறார் சித் மருத்துவமனையின் டாக்டர் அனுராக் மெஹ்ரோத்ரா. மற்ற இன்ஃப்ளூயன்ஸா துணை வகைகளை விட H3N2 வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதாக நிபுணர்கள் கூறுகின்றனர். "இது உயிருக்கு ஆபத்தானது இல்லை. ஆனால் எனது நோயாளிகளில் சிலர் சுவாசக் கோளாறு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதன் சில அறிகுறிகள் கொரோனா போலவே இருக்கிறது." என்று மருத்துவ பரிசோதனை நிபுணர் டாக்டர் அனிதா ரமேஷ் கூறியுள்ளார். நாடு முழுவதும் இருமல், சளி மற்றும் குமட்டல் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில், அதிகமாக ஆண்டிபயாடிக் கொடுக்க வேண்டாம் என்று இந்திய மருத்துவ சங்கம் அறிவுறுத்தியுள்ளது.