இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது
இந்தியாவின் முதல் அரசு கருத்தரிப்பு மையம் தமிழகத்தில் தொடங்கப்பட இருக்கிறது என்று தமிழக சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்த கருத்தரிப்பு மையங்கள் சென்னை எழும்பூரிலும், மதுரையிலும் ரூ.5 கோடி செலவில் அமைக்கப்பட உள்ளது. இந்த அரசு கருத்தரிப்பு மையங்கள் வரும் செப்டம்பர் மாதத்தில் நிறுவப்படும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூறியுள்ளார். இந்தியாவில் பல கருத்தரிப்பு மையங்கள் செயல்பட்டு வந்தாலும், அரசாங்கத்துக்கு சொந்தமான கருத்தரிப்பு மையங்கள் எதுவுமே இல்லை. கருவுறுதல் என்பது மிக பெரும் பிரச்சனையாக உருவெடுத்து கொண்டிருக்கும் நிலையில், செயற்கையாக கருத்தரிப்பது உள்ளிட்ட மருத்துவ உதவிகளுக்கு தனியார் கருத்தரிப்பு மையங்களையே நாட வேண்டி இருக்கிறது.
தமிழகத்தில் 155 தனியார் கருத்தரிப்பு மையங்கள் இயங்கி வருகிறது
ஆனால், தனியார் கருத்தரிப்பு மையங்களில் மிக அதிகமாக பணம் வசூலிக்கப்படுவதால், ஏழை எளியோருக்கு ஏற்றதாக அது இல்லை. 2022ஆம் ஆர்வலர் வெரோனிகா மேரி, தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் இது குறித்த சில தகவல்களை சேகரித்தார். அதன் படி, தமிழகத்தின் 26-மாவட்டங்களில் மொத்தம் 155-தனியார் கருத்தரிப்பு மையங்கள் இயங்கி வருகிறது. தமிழகம் முழுவதும் 30க்கும் மேற்பட்ட அரசு மருத்துவ கல்லூரிகள் மற்றும் 40க்கும் மேற்பட்ட மாவட்ட மருத்துவமனைகள் இயங்கி வருகிறது. ஆனால், அதில் ஒன்றில் கூட கருத்தரிப்பு மையங்கள் இல்லை. இதனையடுத்து, கடந்த வருடம் எழும்பூரிலும், மதுரையிலும் கருத்தரிப்பு மையம் அமைக்கப்படும் என்று தமிழக அரசு சட்டமன்றத்தில் உறுதியளித்திருந்து என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், அதற்கான நடவடிக்கை தற்போது எடுக்கப்பட்டுள்ளது.