கனடாவில் உள்ள இந்திய குடிமக்களுக்கு இந்திய அரசு அறிவுரை
கனடாவில் உள்ள இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்களுக்கு இந்திய அரசாங்கம் இன்று ஒரு அறிவுரையை வெளியிட்டுள்ளது. வளர்ந்து வரும் இந்தியாவுக்கு எதிரான நடவடிக்கைகள், அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட வெறுப்பு குற்றங்கள் மற்றும் வன்முறைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு இந்திய குடிமக்கள் மிகவும் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும் என்று அந்த அறிவுரையில் இந்திய அரசு வலியுறுத்தி உள்ளது. காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொல்லப்பட்ட வழக்கில் இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் மோதலைக் கருத்தில் கொண்டு இந்த அறிவுரை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் வசிக்கும் தனது குடிமக்களுக்கு கனேடிய அரசாங்கம் இதேபோன்ற அறிவுரையை நேற்று வழங்கியது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிவுரையை ட்விட்டரில் வெளியிட்டார் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர்
காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலையில், இந்திய அரசாங்கத்திற்கு நேரடி தொடர்பு இருக்கிறது என்று கனட பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ கனட நாடாளுமன்றத்தில் கூறியதை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையே பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இந்நிலையில், வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, கனடாவில் உள்ள இந்திய குடிமக்கள் மற்றும் மாணவர்களுக்கான அறிவுரையை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். "கனடாவில் வளர்ந்து வரும் இந்தியாவிற்கு எதிரான நடவடிக்கைகள் அரசியல் ரீதியாக தூண்டப்பட்ட வெறுப்பு குற்றங்கள் மற்றும் வன்முறைகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு, அங்குள்ள அனைத்து இந்திய குடிமக்களும், பயணம் செய்பவர்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்" என்று அந்த அறிவுரையில் கூறப்பட்டுள்ளது.
இன்று வெளியிடப்பட்ட இந்திய அரசின் அறிவுரையில் என்ன கூறப்பட்டிருக்கிறது?
கனடாவில் இந்தியாவுக்கு எதிராக செயல்படுபவர்களை எதிர்க்கும் இந்திய தூதர்கள் மற்றும் இந்திய சமூகத்தின் பிரிவுகள், தற்போதைய சர்ச்சைகளுக்கு மத்தியில் அச்சுறுத்தல்களைப் பெறக்கூடும் என்று அந்த அறிவுரையில் கூறப்பட்டுள்ளது. "எனவே, இதுபோன்ற சம்பவங்கள் நடப்பதற்கு வாய்ப்புள்ள கனட பகுதிகள் மற்றும் சாத்தியமான இடங்களுக்குப் பயணம் செய்வதைத் தவிர்க்க இந்திய குடிமக்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள்," என்று அந்த அறிவுரை கூறுகிறது. கனடாவில் உள்ள இந்திய சமூகத்தின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வை உறுதி செய்வதற்காக, இந்திய தூதரக ஜெனரல் கனடிய அதிகாரிகளுடன் தொடர்ந்து தொடர்பில் இருப்பார் என்றும் இந்திய அரசாங்கம் உறுதியளித்துள்ளது. ஒட்டாவா, டொராண்டோ அல்லது வான்கூவரில் இருக்கும் இந்தியத் தூதரகத்தின் இணையதளத்தில் அல்லது MADAD போர்ட்டலில்(madad.gov.in), கனடாவில் இருக்கும் இந்தியர்கள் பதிவு செய்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.