இந்தியாவின் முதல் கிராமமானது உத்தரகாண்டின் 'மனா'
இந்திய-சீன எல்லையில் அமைந்திருக்கும் இந்தியாவின் கடைசி கிராமமான மனாவிற்கு 'இந்தியாவின் முதல் கிராமம்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. எல்லைச் சாலைகள் அமைப்பு, உத்தரகாண்டில் உள்ள இந்த கிராமத்தின் நுழைவாயிலில் 'இந்தியாவின் முதல் கிராமம்' என்ற போர்டை இன்று(ஏப் 25) நிறுவியது. "இனி மனா நாட்டின் கடைசி கிராமமாக அல்லாமல், முதல் கிராமமாக அறியப்படும்" என்று உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு அக்டோபரில் சாமோலி கிராமத்துக்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடி, எல்லையோர கிராமங்கள்தான் நாட்டின் முதல் கிராமங்கள் என்றும், அவை கடைசி கிராமங்கள் அல்ல என்றும் கூறியிருந்தார். இந்த கிராமம், சாமோலி மாவட்டத்தில் இருக்கும் பத்ரிநாத் அருகே அமைந்துள்ள ஒரு சுற்றுலா தலமாகும்.
சுற்றுலா தலமான மனாவிற்கு எப்போது செல்லலாம்
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் பட்ஜெட் உரையில் குறிப்பிடப்பட்ட அரசின் 'வைப்ரன்ட் கிராமம்' திட்டத்தின் ஒரு பகுதியாக இந்த பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டம் 19 மாவட்டங்கள், நான்கு மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் இருக்கும் கிராமங்களை மேம்படுத்துவதற்காக தொடங்கப்பட்டது. மானா கடல் மட்டத்திலிருந்து 3219 மீட்டர் உயரத்தில் உள்ளது. இந்த கிராமம் சரஸ்வதி நதிக்கரையில் அமைந்துள்ளது. மனா கிராமத்தில் மங்கோலிய பழங்குடியினரான போடியாஸ் என்பவர்களும் வசிக்கின்றனர். மே முதல் நவம்பர் வரை இந்த கிராமத்தை சென்று சுற்றி பார்க்கலாம். அதன் பிறகு, ஏப்ரல் வரை கடுமையான பனிப்பொழிவு காரணமாக இப்பகுதிக்கு செல்ல முடியாது.