பிரதமர் மோடியின் அருணாச்சலப் பிரதேச பயணத்தை விமர்சித்த சீனா: விமர்சனத்தை நிராகரித்தது இந்தியா
கடந்த வாரம் பிரதமர் நரேந்திர மோடி அருணாச்சலப் பிரதேசத்துக்குச் சென்றதற்கு சீனா கடும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், தற்போது சீனாவின் எதிர்ப்பை நிராகரித்துள்ள இந்தியா, பிரதமரின் பயணம் மற்றும் வளர்ச்சி திட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதற்கு சீனாவிடம் எந்த காரணம் இல்லை என்று தெரிவித்துள்ளது. "சீனா கூறிய கருத்துக்களை நாங்கள் நிராகரிக்கிறோம். இந்த விஷயத்தில் எங்கள் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அருணாச்சல பிரதேசத்தை இந்தியாவின் ஒருங்கிணைந்த ஒரு பகுதியாக நாங்கள் கருதுகிறோம்" என்று வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது. அருணாச்சலப் பிரதேசத்தை 'ஜாங்னான்' என்று பொதுவாக அழைக்கும் சீனா, அந்த பகுதியை தங்களுக்கு சொந்தமானது என்று உரிமைகோரி வருகிறது. அதனால் அந்த பகுதிக்கு முக்கிய இந்திய தலைவர்கள் சென்றால் அவர்களுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது.
பிரதமர் மோடியின் பயணத்திற்கு அதிருப்தி தெரிவித்த சீனா
கடந்த மார்ச் 9ஆம் தேதி, பிரதமர் மோடி வடகிழக்கு மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்துக்குச் சென்று சேலா சுரங்கப்பாதை உட்பட பல வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைத்தார். இந்த சுரங்கப்பாதையானது, தவாங் மற்றும் கமெங் மாவட்டங்களுக்கு ஒரு முக்கியமான இணைப்பாக செயல்பட இருக்கிறது.இது அனைத்து வானிலைகளிலும் செயல்படக்கூடிய ஒரு சுரங்கபாதையாகும். இது உண்மையான கட்டுப்பாட்டுக் கோட்டுக்கு(இந்திய-சீன எல்லை) மிக அருகில் அமைந்துள்ளது பிரதமர் மோடியின் அருணாச்சல் பயணம் குறித்து நேற்று கருத்து தெரிவித்த சீனா, "கடுமையான அதிருப்தியை" வெளிப்படுத்தியது. மேலும், இந்த விவகாரம் தொடர்பாக இந்தியாவிடம் கவலைகளை எழுப்பியுள்ளதாகவும் தெரிவித்தது. சீனாவின் அந்த எதிர்ப்பை இந்தியா தற்போது நிராகரித்துள்ளது.