அதிக இணைய சேவை முடக்கங்களை சந்தித்த நாடுகளின் பட்டியலில் 2வது இடத்தில் இந்தியா; முதலிடம் யாருக்கு?
செய்தி முன்னோட்டம்
2024 ஆம் ஆண்டு அதிக முறை இணைய சேவை முடக்கங்களை எதிர்கொண்ட நாடுகளின் பட்டியலில், இந்தியா இரண்டாவது இடத்தில் உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் தலைமையிடமாக செயல்படும் Access Now அமைப்பு, இவ்வாண்டின் இறுதியில் வெளியிட்ட ஆய்வின் அடிப்படையில், இந்த பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
அந்த பட்டியலில், 2024 ஆம் ஆண்டில் அதிகமான இணைய முடக்கங்களை சந்தித்த நாடு மியான்மர் ஆகும். அங்கு 85 முறை இணைய முடக்கம் நடந்துள்ளது.
அதன் தொடர்ச்சியாக, இந்தியா 84 முறை இணைய முடக்கத்தை சந்தித்து இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
பாகிஸ்தானில் 21 முறை இணைய முடக்கம் நடந்துள்ளது. பாகிஸ்தானுக்கு அடுத்ததாக ரஷ்யா உள்ளது.
இணைய முடக்கம்
இந்தியாவில் எந்த மாநிலத்தில் அதிக இணைய முடக்கம்?
உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடான இந்தியாவில், 84 முறை இணைய முடக்கங்கள் நிகழ்ந்துள்ளது ஒரு புதிய பதிவாகும்.
இந்தியாவின் 16 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் அதிகளவு இணைய முடக்கங்கள் ஏற்பட்டுள்ளன.
அவற்றுள், மணிப்பூர் முதன்மை இடத்தில் 21 முறை இணைய முடக்கம் நடைபெற்றுள்ளது.
அதற்கு அடுத்தபடியாக ஜம்மு-காஷ்மீர் மற்றும் ஹரியானா ஆகியவை ஒவ்வொன்றும் 12 முறை இணைய முடக்கங்களை சந்தித்துள்ளன.
இந்த 84 முறை இணைய சேவை முடக்கங்களில், 41 முறை போராட்டங்களாலும், 23 முறை வகுப்புவாத வன்முறைகளாலும் காரணியாக கூறப்படுகிறது.