சீன நாட்டின் ஆய்வு கப்பலை இலங்கை துறைமுகத்தில் நிறுத்த கோரிக்கை - இந்தியா அதிர்ச்சி
இலங்கை ஹம்பன்தோட்டா துறைமுகத்தின் மறுசீரமைப்பு பணிகளில் சீனா ஈடுப்பட்டுள்ளது. இதனிடையே தங்கள் நாட்டு கப்பல்களை அவ்வப்போது அனுப்பிவைப்பதை சீனா வழக்கமாக கொண்டுள்ளது. கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் 'யுவான் வாங்-3' என்னும் உளவுக்கப்பலினை சீனா இலங்கைக்கு அனுப்பிவைத்தது. இக்கப்பல் நிறுத்தி வைப்பதன் மூலம் இந்தியா பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் ஏற்படக்கூடும் என்று இந்தியா இலங்கையிடம் தெரிவித்தது. இதனை பரிசீலனை செய்த இலங்கை அரசு, பின்னர் சீனாவிற்கு தாமதமாக அனுமதி வழங்கியது. இந்நிலையில் தற்போது சீனாவின் 'ஷி யான்-6' ஆய்வுக்கப்பலினை கடல்சார்ந்த ஆய்வுகளை மேற்கொள்ள இலங்கைக்கு அனுப்பிவைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அதற்கு இலங்கையிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாகவும், இலங்கை அரசும் இது குறித்து பரிசீலித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
தர்மசங்கடமான சூழ்நிலையில் சிக்கியுள்ள இலங்கை
இத்தகவலை இலங்கை வெளியுறவுத்துறை அமைச்சக செய்தி தொடர்பாளரான பிரியங்கா விக்ரமசிங்கே கூறியுள்ளார். இத்தகவல் இந்தியாவுக்கு பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. சீனநாட்டின் கப்பல்கள் இலங்கையில் நிறுத்தப்படுவதால் இந்திய ராணுவ கட்டமைப்புகளை சீனா உளவுபார்க்க நேரிடும் என்று இந்தியா கவலையடைந்துள்ளது. இதனால் இதுகுறித்து இலங்கையிடம் இந்தியா எதிர்ப்பு தெரிவிக்கக்கூடும் என்றும் கூறப்படுகிறது. இலங்கையை பொருளாதார நெருக்கடியில் இருந்து மீட்டெடுக்க இந்தியா மற்றும் சீனா சம அளவில் பங்காற்றிவருகிறது. அதன்படி இலங்கைக்கு கடனாக சீனா 300 கோடி டாலர் கொடுத்ததோடு அவ்வப்போது தங்கள் நாட்டு கப்பல்களை இங்கு நிறுத்திவைப்பதனை வழக்கமாக கொண்டுள்ளது. தற்போது இலங்கை சீனாவிற்கு அனுமதியளித்தால் இந்தியா அதிருப்தி அடையும் என்பதால், தர்மசங்கடமான நிலையில் இலங்கை சிக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.