இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயிலை இருநாட்டு பிரதமர்கள் துவக்கி வைப்பு
இந்திய பிரதமர் மோடி அழைப்பினை ஏற்று நேபாளம் நாட்டின் பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா நேற்று(மே.,31) நான்கு நாட்கள் சுற்றுப்பயணமாக இந்தியா வந்துள்ளார். அதன்படி அவர் பிரதமர் மோடியினை நேரில் சந்தித்து பேசினார். தொடர்ந்து, இரு நாட்டு பிரதமர்களும் ஒன்றாக இணைந்து இன்று(ஜூன்.,1) பத்திரிகையாளர் சந்திப்பினை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த சந்திப்பின் போது இரு நாட்டின் பிரதமர்களும் கூட்டாக இந்தியா-நேபாளம் இடையேயான சரக்கு ரயில் போக்குவரத்து சேவையினை கொடியசைத்து துவக்கி வைத்துள்ளனர். இந்த ரயிலானது பீகாரில் உள்ள பத்னாஹாவில் இருந்து நேபாளத்தில் உள்ள கஸ்டம் யார்டுக்கு சென்றடையும் என்று கூறப்படுகிறது.
இருநாட்டு மக்களின் இணைப்பினை அதிகரிக்க புதிய ரயில் வழிகள் - மோடி
இதனையடுத்து இருவர் முன்னிலையில் இரு நாட்டுக்கு இடையேயான ஒப்பந்தங்களுக்கான பரிமாற்றங்கள் நடந்தது. பின்னர் இது குறித்து மோடி பத்திரிகையாளர்கள் முன் பேசுகையில், போக்குவரத்து ஒப்பந்தங்கள் இன்று(ஜூன்.,1) கையெழுத்திடப்பட்டு உள்ளது. இருநாட்டு மக்களின் இணைப்பினை அதிகரிக்க புதிய ரயில் வழிகள் நிறுவப்பட்டுள்ளது. இந்தியா-நேபாளம் இடையில் நீண்ட காலத்திற்கான மின்சார வர்த்தக ஒப்பந்தமும் இன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது நம் நாட்டின் மின்சார பிரிவுகளுக்கு வலிமை தரக்கூடியது. இரு நாடுகள் இடையில் மதம் மற்றும் கலாச்சார உறவுகளும் மிக பழமை வாய்ந்தது. இதனை மேற்கொண்டு வலுப்படுத்த ராமாயண பாதை தொடர்புள்ள திட்டங்களை விரிவுபடுத்த நாங்கள் திட்டம் தீட்டி வருகிறோம் என்று கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.