சீனாவிற்கு பதிலடி! கோக்ரா, ஹாட் ஸ்ப்ரிங் உட்பட லடாக்கின் 28 எல்லை இடங்களை வரைபடத்தில் இணைத்து இந்தியா அதிரடி
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசு, லடாக் யூனியன் பிரதேச நிர்வாகத்துடன் கலந்தாலோசித்து, எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டை ஒட்டியுள்ள கோக்ரா மற்றும் ஹாட் ஸ்ப்ரிங் உள்ளிட்ட 28 முக்கியமான மூலோபாய புவியியல் இடங்களை இந்திய அரசின் அதிகாரப்பூர்வ வரைபடவியல் முகமையான சர்வே ஆஃப் இந்தியா வரைபடத்தில் முறைப்படி இணைத்துப் பெயரிட்டுள்ளது. எல்லையோர புவியியல் பெயர்களைத் தரப்படுத்தவும், அப்பகுதிகள் குறித்த துல்லியமான தகவல்களை பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினருக்கு வழங்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்கள் இங்கே:-
2020 மோதல்
2020 சீனா உடனான எல்லை மோதல் பகுதிகள்
தற்போது வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ள இடங்களில் கோக்ரா மற்றும் ஹாட் ஸ்ப்ரிங் ஆகியவை மிகவும் குறிப்பிடத்தக்கவையாகும்.
கடந்த 2020 மே மாதம் கிழக்கு லடாக்கில் உள்ள பங்கோங் ஏரி பகுதியில் இந்திய - சீன ராணுவ வீரர்களிடையே ஏற்பட்ட வன்முறை மோதலைத் தொடர்ந்து, கோக்ரா மற்றும் ஹாட் ஸ்ப்ரிங் பகுதிகள் இரு நாடுகளுக்கும் இடையிலான பிரதான ராணுவ உரசல் புள்ளிகளாக உருவெடுத்தன.
இந்திய படைகளின் ரோந்துப் பணிக்கு மிக முக்கியமான இந்தப் பகுதிகளில், நீண்ட பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகே 2022-இல் படைகள் விலக்கிக் கொள்ளப்பட்டன.
முக்கிய இடங்கள்
வரைபடத்தில் சேர்க்கப்பட்டுள்ள பிற முக்கிய இடங்கள்
மத்திய அரசு வெளியிட்டுள்ள பட்டியலில் சிகரங்கள், மலைப்பாதைகள், பனிப்பாறைகள் மற்றும் பள்ளத்தாக்குகள் என பல புவியியல் பகுதிகள் இடம்பெற்றுள்ளன:
சிகரங்கள் மற்றும் மலைகள்: அலிஷா கிரி, கணிஷ்கா சிகரம், கருண் பீர் மலை, மார்தாண்ட கிரி, சொராவர் சிகரம், திராக் கார்போ, ஜோல்மோரி, ரிஞ்சென் சாங்போ, மார்பா லோத்சவா ரி, மிலரேபா காங்கிரி, சிவா ரி மற்றும் மகேஷ்வரா ரி.
கணவாய்கள் & பனிப்பாறைகள்: சப்சிங்கல் கணவாய், ஷாச்மிரிக் கணவாய், பர்பிக் பனிப்பாறை மற்றும் ஸ்காம்ரி பனிப்பாறை.
நிலப்பரப்பு & பிற பகுதிகள்: பிராங்சா, குக்செல், தேஹ்ரா காம்பஸ், பங்க்லங், சாமாள் லுங்பா (1950-களில் ரோந்துப் பாதையாகப் பயன்படுத்தப்பட்டது), யாங்பா நதி மற்றும் குரு ரின்போச்சே ஏரி.
பதிலடி நடவடிக்கை
சீனாவின் உரிமை கோரல்களுக்கு வலுவான பதிலடி
அருணாச்சலப் பிரதேசம் மற்றும் லடாக் எல்லையோர பகுதிகளுக்கு சீனா தன்னிச்சையாக தனது சொந்த மொழியில் பெயர்களை சூட்டி வரைபடங்களை வெளியிட்டு உரிமை கோரி வரும் சூழலில், அருணாச்சலப் பிரதேசத்தைத் தொடர்ந்து லடாக்கிலும் 28 எல்லை இடங்களை இந்தியா அதிகாரப்பூர்வமாகத் தனது வரைபடத்தில் சேர்த்துள்ளது மிக முக்கிய புவிசார் அரசியல் நகர்வாகப் பார்க்கப்படுகிறது.
இதன் மூலம் எல்லையோரப் பகுதிகளில் இந்தியாவின் இறையாண்மையும், வரலாற்று ரீதியிலான உரிமையும் மீண்டும் உறுதியாக நிலைநாட்டப்பட்டுள்ளது.