இந்திய ராணுவம் வெளியேற வேண்டும்: மாலத்தீவு அதிபர் அதிரடி
நாட்டின் இறையாண்மையை பாதுகாப்பதற்காக மாலத்தீவுகளை விட்டு இந்திய இராணுவம் வெளியேற வேண்டும் என்று மாலத்தீவுகளின் புதிய அதிபர் முகமது மூயிஸ் அறிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் மாலத்தீவுகளில் நடந்த தேர்தலில் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரஸின் முகமது மூயிஸ் என்பவர் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டின் இறையாண்மைக்கு பாதகமாக இருக்கும் பிற நாட்டு இராணுவங்களை வெளியேற்றுவது அவரது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாகும். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை அதிகாரப்பூர்வமாக மாலத்தீவுகளின் 8வது அதிபராக பதவியேற்ற முகமது மூயிஸ், பதவியேற்ற அடுத்த நாள் 'நாட்டின் இறையாண்மையை பாதுக்காக்க இனி எந்த நாட்டு இராணுவத்திற்கும் மாலத்தீவுகளின் மண்ணில் இடம் கிடையாது' என்று அறிவித்துள்ளார்.
மாலத்தீவு மக்களின் நலன்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய இந்தியா பேச்சு வார்த்தை
இதற்காக மாலேயில் வைத்து மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவும் மாலத்தீவுகளின் புதிய அதிபர் முகமது மூயிஸும் சந்தித்து கொண்டனர். எனினும், இந்திய இராணுவத்தை வெளியேற்றாமல், மாலத்தீவு மக்களின் நலன்களுக்கு தொடர்ந்து சேவை செய்ய வைக்க இந்திய தரப்பு மாலத்தீவு அரசிடம் பேச்சு வார்த்தை நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இதற்கிடையில், அதிபர் முகமது மூயிஸை சீன-சார்பு கொள்கைகளை கொண்டவர் என்று மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு வர்ணித்துள்ளார். இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள இந்தியாவின் முக்கிய கடல்சார் அண்டை நாடுகளில் மாலத்தீவுகளும் ஒன்றாகும். மக்களுக்கு மருத்துவ உதவிகளை வழங்குவது, மக்களை மீட்பது போன்ற உதவிகளை இந்திய இராணுவம் மாலத்தீவுகளில் செய்து வந்தது.