7 மாதங்களுக்கு பின் 1900ஐ நெருங்கி இருக்கும் கொரோனா எண்ணிக்கை
210 நாட்கள் இல்லாத அளவு இந்தியாவில் தினசரி கொரோனாவின் எண்ணிக்கை 1,890ஆக அதிகரித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 1,890 புதிய கொரோனா பாதிப்புகளை இந்தியா பதிவுசெய்துள்ள நிலையில், கொரோனா தொடர்ந்து வேகமாக அதிகரித்து வருகிறது என்று இன்று(மார் 27) சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 7 நாட்களில் அதற்கு முந்தைய வாரத்தை விட கொரோனா எண்ணிக்கை 78% அதிகரித்திருக்கிறது. மஹாராஷ்டிராவில் தான் இருப்பதிலேயே அதிக பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இதுவரை, இந்தியாவில் 4.47 கோடி(4,47,02,257) கொரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. மேலும், நாட்டின் செயலில் உள்ள கொரோனா 10,300 ஆக உயர்ந்துள்ளது, இது மொத்த தொற்றுநோய்களில் 0.02 சதவீதமாகும்.
கொரோனா பாதிப்புகள் மற்றும் தடுப்பூசிகள் புள்ளிவிவரங்கள்
சுகாதார அமைச்சகத்தின் கூற்றுப்படி, சண்டிகர், குஜராத், இமாச்சல் மற்றும் உத்திர பிரதேச மாநிலங்களில் தலா 1 இறப்புகள் நேற்று பதிவாகி இருக்கிறது. அதனால், கொரோனாவால் இதுவரை ஏற்பட்ட உயிரிழப்புகள் 5,30,837 ஆக உயர்ந்துள்ளது. கொரோனாவிலிருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை 44164815 ஆக உயர்ந்துள்ளது. தேசிய கொரோனா மீட்பு விகிதம் 98.79 சதவீதமாகவும், இறப்பு விகிதம் 1.19 சதவீதமாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் 56,551 கொரோனா சோதனைகள் நடத்தப்பட்ட நிலையில், இதுவரை மொத்தம் 92.05 கோடி கோவிட் பரிசோதனைகள் நடத்தப்பட்டுள்ளன. இதுவரை 220,65,54,022 கோவிட் தடுப்பூசிகள் மக்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சகத்தின் இணையதள தரவுகள் கூறுகின்றன. கடந்த 24 மணிநேரத்தில் மட்டும் 1,743 தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளன.