'ஆன்மீகம், தொழில்நுட்பம், பொருளாதாரத்தில் இந்தியா முன்னணியில் உள்ளது': பிரதமர் மோடி
இந்தியாவில் ஆன்மீக மையங்கள் புத்துயிர் பெற்று வரும் நிலையில், தொழில்நுட்பம், பொருளாதாரம் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் இந்தியா முன்னேறி வருவதாக பிரதமர் நரேந்திர மோடி இன்று(ஜூலை 4) தெரிவித்தார். ஆந்திரப் பிரதேசத்தின் புட்டபர்த்தியில் உள்ள பிரசாந்தி நிலையத்தில் இருக்கும் சாய் ஹிரா குளோபல் கன்வென்ஷன் சென்டரின் திறப்பு விழாவில் பிரதமர் மோடி இன்று வீடியோ கால் மூலம் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய அவர், "ஒருபுறம் ஆன்மீக மையங்கள் நாட்டில் புத்துயிர் பெறுகின்றன. அதே நேரத்தில் இந்தியா பொருளாதாரம் மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னணியில் உள்ளது... இன்று இந்தியா உலகின் முதல் ஐந்து பொருளாதாரங்களில் ஒன்றாக உள்ளது. உலகின் மூன்றாவது பெரிய ஸ்டார்ட்அப் சுற்றுச்சூழல் அமைப்பை இந்தியா கொண்டுள்ளது." என்று பேசியுள்ளார்.
பிரதமர் மோடி மேலும் இன்று பேசியதாவது:
இந்த மாநாட்டு மையத்தின் படங்களை நான் பார்த்தேன். இது ஆன்மீக மாநாடுகள் மற்றும் கல்வி நிகழ்ச்சிகளின் மையமாக இருக்கும். உலகம் முழுவதிலுமிருந்து நிபுணர்கள் இங்கு வருவார்கள். மேலும் இந்த மையம் நாட்டின் இளைஞர்களுக்கு உதவும் என்று நம்புகிறேன். இன்று இந்தியா உலகின் 5வது பெரிய பொருளாதாரமாக உள்ளது. சமூகத்தின் ஒவ்வொரு பிரிவினரின் பங்களிப்புடன் இன்று மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. துறவிகளை நம் நாட்டில் பெரும்பாலும் ஓடும் நீர் என்று வர்ணிக்கிறார்கள். ஏனென்றால் துறவிகள் ஒருபோதும் தங்கள் எண்ணங்களோடு நின்றுவிடுவதில்லை, அவர்கள் செயல்களோடும் நிறுத்திவிடுவதில்லை. தொடர் ஓட்டமும், தொடர் முயற்சியும்தான் மகான்களின் வாழ்க்கை. என்று தெரிவித்துள்ளார்.