இந்தியா வங்கதேசமோ பிரான்ஸோ அல்ல! ஜார்ஜ் சொரோஸால் ஆட்சி மாற்றம் செய்ய முடியாது! மத்திய அமைச்சர் எச்சரிக்கை
செய்தி முன்னோட்டம்
வங்கதேசம் மற்றும் பிரான்ஸ் நாடுகளில் நிகழ்ந்த வன்முறை சம்பவங்களைப் போன்று இந்தியாவிலும் வீதிகளில் கலவரத்தைத் தூண்ட சில எதிர்ப்புச் சக்திகளும் அரசியல்வாதிகளும் சதித் திட்டம் தீட்டி வருவதாக மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு குற்றம் சாட்டியுள்ளார். "இந்தியா வங்கதேசமோ அல்லது பிரான்ஸோ அல்ல என்பதை இந்த ஆபத்தான சதியைத் தீட்டியவர்கள் மறந்துவிட்டார்கள்" என்று அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்திய இளைஞர்களைத் தவறாக வழிநடத்த முனையும் முயற்சியை அரசு ஒருபோதும் அனுமதிக்காது என்று அவர் எச்சரித்துள்ளார்.
ஜார்ஜ் சொரோஸ்
ஜார்ஜ் சொரோஸ் மற்றும் தேர்தல் முறை குறித்த பேச்சு
இந்தியாவில் ஆட்சி மாற்றம் என்பது சாத்தியமானதுதான், ஆனால் அது ஜனநாயக முறைப்படி தேர்தல்கள் மூலமாக மட்டுமே நடக்கும் எனக் கிரண் ரிஜிஜு தெளிவுபடுத்தியுள்ளார்.
அமெரிக்க தொழிலதிபர் ஜார்ஜ் சொரோஸ் போன்றவர்களின் நிதி அல்லது சதித் திட்டங்கள் மூலம் இந்தியாவில் ஆட்சியைக் கவிழ்க்க முடியாது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய இளைஞர்கள் நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபடுபவர்களே தவிர, தேசத்தை சீரழிக்கும் அமைப்புகளுக்குப் பலியாக மாட்டார்கள் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
பாஜக கொந்தளிப்பு
பிரசாந்த் பூஷண் கருத்து மற்றும் பாஜகவின் கொந்தளிப்பு
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராகத் டெல்லியில் நடைபெற்ற போராட்டத்தின் போது, மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் ஆட்சி மாற்றம் தேவை எனப் பேசியிருந்தார்.
"அரசு கொடூரமான நடவடிக்கைகளைத் தொடர்ந்தால் கண்டிப்பாக ஆட்சி மாற்றம் ஏற்படும்" என்று அவர் குறிப்பிட்டிருந்தார்.
இக்கருத்திற்கு பாஜக தலைவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
முன்னதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் காங்கிரஸ் கட்சி நாட்டில் வன்முறையைத் தூண்ட முயல்வதாகக் குற்றம் சாட்டியிருந்தார்.
ஜனநாயக உரிமை
எதிர்க்கட்சிகளின் விளக்கமும் ஜனநாயக உரிமையும்
பாஜகவின் இந்த குற்றச்சாட்டுகளுக்குப் பதிலளித்துள்ள காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்கள், ஜனநாயக நாட்டில் ஆட்சி மாற்றம் எனக் கூறுவது ஒரு சாதாரண அரசியலமைப்பு உரிமையே என்று தெரிவித்துள்ளனர்.
காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேடா, "நாங்கள் தேர்தல் மூலமாகவே தற்போதைய அரசை வீழ்த்தி ஆட்சி மாற்றத்தைக் கொண்டுவர விரும்புகிறோம்" என்று விளக்கமளித்தார்.
மேலும் கபில் சிபல் போன்ற மூத்த தலைவர்களும் மக்களே தற்போதைய அரசை மாற்ற விரும்புவதாகக் கருத்துத் தெரிவித்துள்ளனர்.