பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது
மே மாதம் கோவாவில் நடக்கும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின்(SCO) கூட்டத்திற்கு பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சருக்கு இந்தியா அழைப்பு விடுத்துள்ளது. இஸ்லாமாபாத்தில் இருக்கும் அமைச்சரின் அலுவலகம் இன்னும் இது குறித்து முடிவெடுக்கவில்லை என்றாலும், பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி அழைப்பைப் பெற்றுக்கொண்டார் என்று பாகிஸ்தான் வட்டாரங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. ஒரு மாதத்திற்கு முன்பு, ஐநா பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடியைக் குறித்து பாகிஸ்தான் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ சர்தாரி கூறிய கருத்துக்கள் இந்தியாவில் பெரும் எதிர்ப்பைப் பெற்றது. பிலாவல் சர்தாரியின் கருத்து "நாகரீகமற்றது" என்று இந்திய விமர்சகர்கள் கூறினார்கள். சீனாவின் புதிய வெளியுறவு அமைச்சர் குயின் கேங்கிற்கும் இந்த அழைப்பு அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
12 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சர் இந்தியா வருவாரா?
பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப் அனைத்து நிலுவையில் உள்ள பிரச்சினைகள் குறித்தும் இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்த சில நாட்களுக்கு முன் அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில், இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்தால் பாகிஸ்தானுக்கு அழைப்பு விடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இந்த அழைப்பை பாகிஸ்தான் ஏற்றுக்கொண்டால், பிலாவல் பூட்டோ சர்தாரி 12 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு வரும் முதல் பாகிஸ்தான் வெளியுறவுதுறை அமைச்சராக இருப்பார். நவம்பர் 2021இல், ஆப்கானிஸ்தான் தொடர்பான தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களின் கூட்டத்திற்கு பாகிஸ்தானை புதுடெல்லி அழைத்திருந்தது. அப்போது, ஆப்கானிஸ்தான் பிரச்சனைகளில் இந்தியா எதிர்மறையான பாத்திரத்தை வகிக்கிறது என்று குற்றம்சாட்டிய பாகிஸ்தான், இந்த அழைப்பை நிராகரித்தது. "கெடுக்கும் ஒருவரால் அமைதியை ஏற்படுத்த முடியாது" என்று பாகிஸ்தானின் அப்போதைய பாதுகாப்பு ஆலோசகர் மொயீத் யூசுப் கூறியிருந்தார்.