பிரதமர் மோடியுடன் பேச்சு வார்த்தை நடத்த பாகிஸ்தான் விதித்த நிபந்தனை
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப், "காஷ்மீர் போன்ற தீவிரமான பிரச்சனைகள்" குறித்து பிரதமர் நரேந்திர மோடியுடன் "நேர்மையான பேச்சுவார்த்தைக்கு" அழைப்பு விடுத்துள்ளார். இந்தியாவுடனான மூன்று போர்களுக்குப் பிறகு ஏற்பட்ட "துன்பம், வறுமை மற்றும் வேலையில்லாத் திண்டாட்டம்" கற்று தந்த பாடத்தை தனது நாடு கற்றுக்கொண்டதாகவும், அண்டை நாடுகளுடன் அமைதியை விரும்புவதாகவும் அவர் தெரிவித்திருக்கிறார். துபாயின் அல் அரேபியா தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் பேசிய ஷெரீப், இந்தியாவையும் பாகிஸ்தானையும் பேச்சுவார்த்தைக்கு கொண்டுவர UAE ஆட்சியாளர் முகமது பின் சயீத் அல் நஹ்யானின் உதவியை நாடினார். பாகிஸ்தானும் இந்தியாவும் தங்களின் இருதரப்பு பிரச்சினைகளை, குறிப்பாக ஜம்மு காஷ்மீரின் முக்கிய பிரச்சினையை பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து வலியுறுத்தினார்.
பாகிஸ்தான் பிரதமர் ஷேபாஸ் ஷெரீப் கூறியதாவது:
"பாகிஸ்தான் அமைதியை விரும்புகிறது. ஆனால் காஷ்மீரில் நடப்பதை நிறுத்த வேண்டும். காஷ்மீரில் அப்பட்டமான மனித உரிமை மீறல்கள் நாளுக்கு நாள் நடைபெற்று வருகின்றன. அங்குள்ள சிறுபான்மையினர் மிகவும் தவறாக நடத்தப்படுகிறார்கள். அந்த பிராந்தியத்திற்கு அமைதியை கொண்டு வர வேண்டும். இந்தியாவுடனான பேச்சு வார்த்தைக்கு நாங்கள் தயார்." என்று தெரிவித்திருக்கிறார். அதன்பிறகு, பாகிஸ்தான் பிரதமரின் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், "ஆனால், ஆகஸ்ட் 5, 2019அன்று இந்தியா செய்த சட்டவிரோத நடவடிக்கையை ரத்து செய்யாமல், பேச்சுவார்த்தை சாத்தியமில்லை." என்ற நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. காஷ்மீரின் சிறப்பு சலுகைகள்(சட்டப்பிரிவு 370) அந்த தேதியில் தான் இந்திய அரசால் நீக்கப்பட்டது. இந்த சிறப்பு சலுகைகளை மீண்டும் காஷ்மீருக்கு வழங்கினால் மட்டுமே பாகிஸ்தானுடன் பேச்சு வார்த்தை நடத்தமுடியும் என்று பாகிஸ்தான் தெரிவித்திருக்கிறது.