Loading...
பாதுகாப்பு அச்சுறுத்தல்! Bitchat செயலியை முடக்க GitHub-க்கு இந்திய அரசு உத்தரவு; முழு விபரம்
பிட்சாட் ஆப் முடக்கம்

பாதுகாப்பு அச்சுறுத்தல்! Bitchat செயலியை முடக்க GitHub-க்கு இந்திய அரசு உத்தரவு; முழு விபரம்

எழுதியவர் Sekar Chinnappan
Jul 24, 2026
06:00 pm

செய்தி முன்னோட்டம்

இணைய இணைப்பு, மொபைல் நெட்வொர்க் அல்லது மையக் கட்டுப்பாட்டு சர்வர்கள் எதுவுமின்றி புளூடூத் மெஷ் தொழில்நுட்பம் மூலம் இயங்கும் Bitchat எனும் தகவல்தொடர்பு செயலியின் GitHub இணைப்புகளை உடனடியாக முடக்குமாறு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய சைபர் குற்ற ஒருங்கிணைப்பு மையம் (I4C), நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொது அமைதியைக் கருத்தில் கொண்டு இந்த அதிரடி உத்தரவைப் பிறப்பித்துள்ளது.

ஆதங்கம்

டெவலப்பர் ஜாக் டோர்சி வெளியிட்ட ஆதங்கம்

ட்விட்டர் நிறுவனத்தின் மேனாள் தலைமை நிர்வாகியும், பிட்கேட் செயலியின் உருவாக்கத்தில் முக்கியப் பங்கு வகித்தவருமான ஜாக் டோர்சி, அரசின் இந்த அறிவிப்பு குறித்து எக்ஸ் தளத்தில் தனது எதிர்ப்பைப் பதிவு செய்துள்ளார்.

"இந்திய அரசு Bitchat போன்ற நவீனத் தொழில்நுட்பங்களை விரும்புவதில்லை. அதனால் தான் அதைத் தடை செய்ய சொல்கிறது" என்று அவர் பதிவிட்டுள்ளார்.

இந்த செயலி பயனர்களின் தொலைபேசி எண், தனிநபர் விவரங்கள் அல்லது பதிவுகள் எதையும் சேகரிக்காமல் முற்றிலும் அநாமதேயமாக செயல்படும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பாதுகாப்பு அச்சுறுத்தல்

நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் என அரசு விளக்கம்

இந்த செயலியின் Decentralised கட்டமைப்பு, சட்ட அமலாக்க முகமைகள் குற்றவாளிகளைக் கண்காணிப்பதையும், விசாரணை நடத்துவதையும் பெரிதும் தடுக்கிறது என்று அரசு தனது உத்தரவில் சுட்டிக்காட்டியுள்ளது.

இணைய சேவைகள் முடக்கப்படும் போர்க் காலங்கள், வன்முறைகள் அல்லது கலவரங்களின் போது, பயங்கரவாத அமைப்புகள் மற்றும் குற்றவியல் கும்பல்கள் சட்டவிரோத நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க இந்தத் தொழில்நுட்பத்தைத் தவறாகப் பயன்படுத்த அதிக வாய்ப்புள்ளதாக பாதுகாப்பு முகமைகள் கவலை தெரிவித்துள்ளன.

ADVERTISEMENT

நடைமுறை சிக்கல்

புலனாய்வு அமைப்புகளுக்கு ஏற்படும் நடைமுறை சிக்கல்கள்

மைய சர்வர் மற்றும் சேவை வழங்குநர்கள் (Service Provider) இல்லாததால், குற்றச் செயல்களில் ஈடுபடுபவர்களின் சந்தாதாரர் விவரங்கள் அல்லது உரையாடல் பதிவுகளைப் பெற முடிவதில்லை என புலனாய்வு அமைப்புகள் தெரிவித்துள்ளன.

இணையக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் போது கூட, இந்த செயலி மூலம் தகவல்களை பரிமாறிக் கொள்ள முடியும் என்பதால், இது நாட்டின் இறையாண்மை மற்றும் பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக உருவெடுத்துள்ளது என்று அரசு குறிப்பிட்டுள்ளது.

ADVERTISEMENT

முடக்கம்

குறிப்பிட்ட GitHub இணைப்புகள் முடக்கம்

இந்த உத்தரவின் அடிப்படையில் Bitchat செயலியின் முதன்மை களஞ்சியம் (Repository), ஆண்ட்ராய்டு களஞ்சியம் மற்றும் அதன் ரிலீஸ் பக்கங்கள் அடங்கிய மூன்று முக்கிய GitHub வலைதள முகவரிகளை உடனடியாக முடக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மின்னணு ஆதாரங்கள் எதுவும் சேதமடையாத வகையில் இந்த நடவடிக்கை உடனடியாக எடுக்கப்பட வேண்டும் என்றும் GitHub தளத்திற்கு மத்திய அரசு கண்டிப்பான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது.

ADVERTISEMENT