நைஜரில் வசிக்கும் இந்தியர்களை உடனடியாக வெளியேற மத்திய அரசு அறிவுறுத்தல்
ராணுவ புரட்சி வெடித்துள்ள ஆப்பிரிக்க நாடான நைஜரில் வசிக்கும் இந்தியர்கள் அங்கிருந்து வெளியேறுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. கடந்த மாதம் நடந்த ராணுவ புரட்சியால் நைஜரில் தற்போது வன்முறைகள் அதிகரித்த வண்ணம் உள்ளன. அங்கு நிலையற்ற தன்மை நிலவுவதால் பல ஐரோப்பிய நாடுகள் தங்கள் குடிமக்களை வெளியேற்றியுள்ளன. இந்தியர்களை பொறுத்தவரை சுமார் 250 பேர் நைஜரில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், வெள்ளியன்று செய்தியாளர்களை சந்தித்த இந்திய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் அரிந்தம் பாக்சி, அத்தியாவசியமற்ற பணியில் உள்ளவர்கள் உடனடியாக நாட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்தியுள்ளார். மேலும், அங்குள்ள இந்தியர்களுடன் தூதரகம் தொடர்பில் உள்ளதாகவும், எந்தவொரு அவசர உதவிக்கும் தூதரகத்தை +227 9975 9975 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளுமாறு கூறினார்.
நைஜரில் நான்காவது முறையாக இராணுவ புரட்சி
நைஜரின் அதிபராக இருந்த மொஹமட் பாஸூம் மேற்குலக நாடுகளுக்கு ஆதரவாக செயல்படுவதாக கூறி, கடந்த ஜூலை 26 அன்று அவரை வீட்டுக் காவலில் வைத்து, ஜனாதிபதி பாதுகாப்புப் படையின் தலைவர் ஜெனரல் அப்துரஹ்மானே டிசியானி அதிகாரத்தை கைப்பற்றினார். ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றிய பின்னர் நைஜர் முழுவதும் வன்முறை வெடித்தது. அண்டை நாடுகளான மாலி, கினியா, சாட் மற்றும் புர்கினா பாசோவைத் தொடர்ந்து, மூன்று ஆண்டுகளுக்குள் ராணுவ புரட்சியை கண்ட ஐந்தாவது ஆப்பிரிக்க நாடு நைஜர் ஆகும். மேலும், 1960ல் நைஜர் சுதந்திரம் பெற்ற பிறகு நாட்டில் நடந்த நான்காவது ஆட்சிக்கவிழ்ப்பு இதுவாகும். ஐக்கிய நாடுகள் சபை, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் ஆப்பிரிக்க ஒன்றியம் ஆகிய நாடுகள் ராணுவ ஆட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளன.