'இண்டியா' ஆலோசனை கூட்டம் இன்று தொடக்கம்: தொகுதி பங்கீடு, தேர்தல் பிரச்சார வியூகம் குறித்து ஆலோசனை
எதிர்வரும் மக்களவை தேர்தலை எதிர்கொள்ள, எதிர்க்கட்சிகளின் கூட்டணியான 'இண்டியா' , தனது ஆலோசனை கூட்டத்தை, மும்பையில் இன்று தொடங்குகிறது. இதில் கலந்துகொள்ள முதல்வர் ஸ்டாலின், இன்று மும்பை செல்கிறார் என அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளின் முதல் ஒருங்கிணைந்த கூட்டம், பிஹாரில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்றதை அடுத்து, இரண்டாவது கூட்டம், ஜூலை மாதம் பெங்களுருவில் நடைபெற்றது. அப்போதுதான் ஐக்கிய முற்போக்குக் கூட்டணியின் பெயரை 'இண்டியா' என பெயர்மாற்றம் செய்து அறிவித்தனர். இந்நிலையில், இன்று மும்பையில் கூடவிருக்கும் கூட்டத்தில், இந்த கூட்டணிக்கான இலச்சினை (லோகோ) வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு, முக்கிய முடிவாக தொகுதி பங்கீடு குறித்தும் விவாதிக்கப்படும் என கூறப்படுகிறது.
ஆளும் கட்சி கூட்டம்
எதிர்க்கட்சிகள் பொதுக்கூட்டம் கூடுவதை அடுத்து, ஆளும் பா.ஜ.க கட்சியும், தனது கூட்டணி கட்சிகளுடன் மும்பையில் ஆலோசனை கூட்டத்தை நடத்த போவதாக அறிவித்துள்ளது. 2 நாள் கூட்டமாக நடைபெறும் இந்த ஆலோசனையின் முதல் நாளான இன்று, மகாராஷ்டிர முதல்வர் ஏக்நாத் ஷிண்டே இல்லத்தில் நடைபெறும் என்றும், இந்த கூட்டத்தில், மகாராஷ்டிரா முதல்வர் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் ஆகியோர் கலந்து கொள்வார்கள் என்றும் கூறப்படுகிறது. கடந்த ஆலோசனை கூட்டத்தின் போது, இரு மாநிலங்களுக்கான வேட்பாளர்களை இந்த கூட்டணி முன்னேற்பாடாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.