LAC-ல் ராணுவ முக்கியத்துவம் உள்ள இடத்தை குறிவைத்துள்ள இந்தியா
இந்தியா மற்றும் சீனாவின் எல்லைகள் லைன் ஆப் ஆக்சுவல் கண்ட்ரோல் (LAC) எனப்படும் தெளிவற்ற எல்லையால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தியா தனது வடக்கு பகுதியில் உள்ள ராணுவ தளமான தௌலத் பெக் ஓல்டிக்கு (DPO) செல்ல 130 கிலோமீட்டர் தூரத்திற்கு சாலை அமைத்து வருகிறது. இந்த சாலை அமைக்கப்பட்டால் ராணுவ வீரர்கள், ஆயுதங்கள் மற்றும் தளவாடங்களை நாட்டின் எல்லைக்கு எளிமையாக எடுத்துச் செல்ல முடியும். இதன் மூலம் சீனாவின் எல்லை தாண்டிய ஊடுருவர்களை முறியடிக்க முடியும் எனவும் ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளை இந்தியாவால் கட்டுப்பாட்டில் வைக்க முடியும் எனவும் நம்பப்படுகிறது. இந்தியா இந்த சாலை அமைக்கும் பணியை கடந்த 2020 ஆம் ஆண்டு சீனாவுடன் ஏற்பட்ட ராணுவ பதற்றத்திற்கு பின் தொடங்கியிருந்தது குறிப்பிடத்தக்கது.
ஓராண்டுக்குள் பணிகள் முழுவதுமாக முடிந்து விடும்
இந்திய அரசால் நுப்ரா பள்ளத்தாக்கில் உள்ள சசோமா பகுதி முதல் டிபிஓ வரை அமைக்கப்பட்டு வரும் 130 கிலோமீட்டர் நீல சாலை அமைக்கும் பணி அதன் இறுதி மற்றும் கடினமான கட்டத்தை எட்டியுள்ளது. பனிப்பாறை நிலப்பகுதிகள் மற்றும் ஷியோக் நதியில் பாலம் கட்ட எல்லை சாலைகள் அமைப்பின்(பார்டர் ரோட்ஸ் ஆர்கனைசேஷன்) உதவி தேவைப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. இப்போது போடப்பட்டு வரும் சாலையை அவசர ராணுவ நடவடிக்கைகளுக்கு இந்த வருடம் நவம்பர் மாதம் முதல் பயன்படுத்த முடியும். இன்னும் ஓராண்டுக்குள் இந்த சாலையை முழுவதுமாக ராணுவ பயன்பாட்டிற்கு பயன்படுத்த முடியும். இந்தத் திட்டத்தில் 2,000 பணியாளர்கள் பணியமத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.