பிரதமரின் சுதந்திர தின உரையில் கலந்துகொள்ள இருக்கும் அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள்
சுதந்திர தினத்தன்று செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்ற இருக்கிறார். அந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்காக அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்களின் குழு ஒன்று இந்தியாவிற்கு வரவுள்ளது. இந்த குழுவில் இடதுசாரி, வலதுசாரி என அனைத்து தரப்பையும் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களும் இருப்பார்கள் என்று கூறப்படுகிறது. இந்திய-அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கண்ணா மற்றும் காங்கிரஸ்காரர் மைக்கேல் வால்ட்ஸ் ஆகியோர் இந்த குழுவுக்கு தலைமை தாங்குகின்றனர். அமெரிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆகஸ்ட் 15ஆம் தேதி, அதாவது சுதந்திர தினத்தன்று செங்கோட்டைக்கு வருகை தந்து, பிரதமர் மோடியின் உரையில் கலந்து கொள்வார்கள்.
சுதந்திரப் போராட்ட வீரரின் பேரனான ரோ கண்ணா
இது தவிர, அவர்கள் மும்பை, ஹைதராபாத் மற்றும் புதுடெல்லி ஆகிய நகரங்களுக்கு சென்று வணிகம், தொழில்நுட்பம், அரசாங்கம் போன்ற துறைகளை சேர்ந்த தலைவர்களை சந்தித்து பேசுவார்கள். மேலும், மகாத்மா காந்திக்கு அர்ப்பணிக்கப்பட்ட வரலாற்று நினைவுச்சின்னமான ராஜ்காட்டையும் அவர்கள் பார்வையிடுவார்கள் என்று ஒரு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்ணா மற்றும் வால்ட்ஸ் ஆகியோருடன் காங்கிரஸ் உறுப்பினர்களான டெபோரா ரோஸ், கேட் கேமாக், ஸ்ரீதனேடர், ஜாஸ்மின் க்ரோக்கெட், ரிச் மெக்கார்மிக் மற்றும் எட்-கேஸ் ஆகியோரும் இந்தியாவுக்கு வரவுள்ளனர். நாடாளுமன்ற உறுப்பினர் ரோ கண்ணாவின் தாத்தா அமர்நாத் வித்யாலங்கார், மகாத்மா காந்தியுடன் நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்த இந்திய சுதந்திரப் போராட்ட வீரர் ஆவார். மேலும், அவர் இந்தியாவின் முதல் நாடாளுமன்றத்தின் உறுப்பினராகவும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.