
உத்தரகாண்ட் சுரங்கப்பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்க இன்று தொடங்குகிறது கைகளால் துளையிடும் பணி
செய்தி முன்னோட்டம்
உத்தரகாண்ட் மாநிலம் உத்தர்காஷி மாவட்டத்தில் உள்ள சில்க்யாரா சுரங்கப்பாதை கடந்த நவம்பர் 12 ஆம் தேதி இடிந்து விழுந்ததையடுத்து, 41 தொழிலாளர்கள் அந்த சுரங்கபாதையில் சிக்கி கொண்டனர்.
அதனை தெடர்ந்து, 16 நாட்களுக்கும் மேலாக அவர்களை மீட்பதற்கான முயற்சிகள் நடந்து வருகின்றன. ஆனால், இன்னும் அவர்கள் மீட்கப்படவில்லை.
கடந்த சனிக்கிழமை, 41 தொழிலாளர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்த ராட்சத உபகரணம் பழுதாகி உடைந்துவிட்டது.
சில்க்யாரா சுரங்கப்பாதையின் இடிபாடுகளுக்குள் துளையிட்டுக் கொண்டிருந்தபோது, ஆஜர் இயந்திரத்தின் பிளேடுகள் இடிபாடுகளில் சிக்கிக்கொண்டன.
ஏறக்குறைய 60 மீட்டர் இடிபாடுகளை உடைக்க, இந்த கனரக இயந்திரம் அமெரிக்காவிலிருந்து கொண்டு வரப்பட்டது.
இது உடைந்து விழுந்த நிலையில், அந்த இயந்திரத்தின் உடைந்த பாகங்கள் இன்று அகற்றப்பட்டன.
எக்ஸ்ல்வ்ம்ஃ`
எப்போது முடியும் மீட்பு பணி?
இதனையடுத்து, இன்றிலிருந்து மீதம் உள்ள சுரங்க இடிபாடுகள் கைகளால் துளையிடப்பட இருக்கின்றன.
தொடர்ச்சியான பின்னடைவுகளுக்குப் பிறகு, சுரங்கப்பாதையின் சரிந்த பகுதிக்கு மேலே உள்ள மலையின் உச்சியில் இருந்து செங்குத்தாக துளையிடும் நடவடிக்கைகளும் நேற்று தொடங்கியது.
நேற்று ஒரு நாளைக்குள் மீட்புக் குழுவினர் வெற்றிகரமாக கிட்டத்தட்ட 20 மீட்டர்கள் துளையிட்டனர்.
தடைகள் ஏதும் ஏற்படாத பட்சத்தில், இந்த துளையிடும் பணி வரும் வியாழக்கிழமைக்குள் வெற்றிகரமாக முடிவடையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த பணிகள் முடிவடைந்ததும் 700-மிமீ அகலமுள்ள குழாய்கள் உள்ளே செலுத்தப்பட்டு, அதன் மூலம் தொழிலாளர்கள் மீட்கப்படுவார்கள்.
இதற்கிடையில், அமெரிக்க ஆஜர் இயந்திரம் துளையிட்டு கொண்டிருந்த பகுதியில் அடுத்த 10-15 மீட்டர்களுக்கு கைகளால் துளையிடப்பட இருக்கிறது.