மல்யுத்த வீரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசாங்கம் முடிவு
இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும், பாஜக எம்பியுமான பிரிஜ் பூஷன் சரண் சிங்கிற்கு எதிராக போராட்டம் நடத்தி வரும் மல்யுத்த வீரர்களை பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் அழைத்துள்ளதாக மத்திய விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் இன்று(ஜூன் 7) தெரிவித்தார். சில நாடகளுக்கு முன், இதே மல்யுத்த வீரர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்தித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. "மல்யுத்த வீரர்களின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க அரசாங்கம் தயாராக உள்ளது. அதற்காக மல்யுத்த வீரர்களை மீண்டும் ஒருமுறை அழைத்துள்ளேன்" என்று தாக்கூர் ட்வீட் செய்துள்ளார். கடந்த சனிக்கிழமை இரவு மல்யுத்த வீரர்கள் அமித்ஷாவை சந்தித்தனர். அந்த கூட்டத்தின் போது என்ன நடந்தது என்பதை வெளியே சொல்ல வேண்டாம் என்று அரசாங்கம் மல்யுத்த வீரர்களிடம் கேட்டுக்கொண்டதாக கூறப்படுகிறது.
அரசாங்கம் எங்கள் கோரிக்கைகளை ஏற்கவில்லை: பஜ்ரங் புனியா
இதற்கிடையில், அமித்ஷாவை சந்தித்த பிறகு மல்யுத்த வீரர்கள் போராட்டத்தை கைவிட்டதாக சில செய்திகள் வெளியாகி இருந்தது. அதற்கு பதிலளித்த மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியா, "போராட்டம் ஓயவில்லை, தொடரும். அதை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது என்பது குறித்து நாங்கள் வியூகம் வகுத்து வருகிறோம். விளையாட்டு வீரர்கள் அரசாங்கத்தின் பதிலில் திருப்தி அடையவில்லை. அரசாங்கமும் எங்கள் கோரிக்கைகளை ஏற்கவில்லை." என்று கூறியுள்ளார். இந்திய மல்யுத்த சம்மேளனத்தின்(WFI) தலைவரும் ஆளும் பாஜகவின் நாடாளுமன்ற உறுப்பினருமான பிரிஜ் பூஷன் சரண் சிங், பெண் மல்யுத்த வீரர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவரை கைது செய்யக் கோரி இந்தியாவின் முன்னணி மல்யுத்த வீரர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.