சுவரின் மீது தூக்கி எறியப்பட்ட பிறந்த குழந்தை வேலியில் சிக்கி உயிரிழப்பு: ஹரியானாவில் கொடூரம்
ஹரியானாவின் அஜ்ரோண்டா கிராமத்தில் நேற்று இரவு, புதிதாகப் பிறந்த ஆண் குழந்தையின் சடலம் சுவரில் இருந்த கிரில்லில் சிக்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்டது. யாரோ ஒரு நபர் புதிதாகப் பிறந்த குழந்தையை கூரான வேலியில் வீசி எறிந்திருக்க வேண்டும் என்று போலீஸார் சந்தேகிக்கின்றனர். இன்று காலை உள்ளூர்வாசிகளால் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்த அதிர்ச்சி சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. புதிதாகப் பிறந்த குழந்தையின் உடல் இரும்பு வேலியில் இருந்து கவனமாக அகற்றப்பட்டு, பின்னர் பிரேத பரிசோதனைக்காக ஃபரிதாபாத்தில் உள்ள பாட்ஷா கான் சிவில் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.
பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்ட குழந்தையின் உடல்
குழந்தை தூக்கி எறியப்படுவதற்கு முன்பு கொல்லப்பட்டதா அல்லது வேலியில் சிக்கியதனால் குழந்தை இறந்ததா என்பது பிரேதப் பரிசோதனையில் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்துள்ளனர். குழந்தையின் இறப்புக்கு காரணமான நபர்களை அடையாளம் கண்டு பிடிக்கும் நோக்கத்தோடு போலீசார் சுற்றியுள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். "பெற்றோர்கள் தான் குற்றவாளிகள்" என்று அதிர்ச்சியடைந்த அஜ்ரோண்டா குடியிருப்பாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சிலர் குழந்தையின் கொடூரமான மரணத்திற்கு காரணமானவர்களுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று கோரியுள்ளனர். இது குறித்து மேலும் விசாரணை நடைபெற்று வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.