தமிழகத்தில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்பு: வானிலை அறிக்கை
தென் இந்தியாவின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்குகளில் மேற்கு திசை காற்றும் கிழக்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதனால், ஏப்ரல் 7, 8 மற்றும் 11ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வட உள் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்பிருக்கிறது. ஏப்ரல் 9 மற்றும் 10ஆம் தேதிகளில் தென் தமிழக மாவட்டங்கள் மற்றும் வடஉள் மாவட்டங்களின் ஓரிரு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. ஏப்ரல் 7 முதல் 11ஆம் தேதி வரை தமிழகத்தின் சில இடங்களில் வெப்பநிலை 2-3 செல்சியஸ் அதிகமாக இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தியாவின் பல மாநிலங்களில் இடியுடன் கூடிய மழை இருக்கும்
இந்தியாவின் வடகிழக்கு பகுதியை அடையும் வலுவான மேற்குதிசை காற்றால், ஒடிசா மற்றும் மகாராஷ்டிரா உட்பட நாட்டின் பல பகுதிகளில் இன்று(ஏப் 7) இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம்(IMD) கணித்துள்ளது. மேலும், அடுத்த ஐந்து நாட்களுக்கு நாட்டின் எந்தப் பகுதியிலும் வெப்ப அலைகள் இருக்காது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. "சமீபத்திய செயற்கைக்கோள் மற்றும் ரேடார் படங்களின் கலவையானது, ஒடிசாவை ஒட்டிய தெற்கு சத்தீஸ்கர் மற்றும் வடக்கு கடலோர ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானாவை ஒட்டிய தெற்கு மராத்வாடா, உள் வடக்கு கர்நாடகா, தெற்கு கேரளா மற்றும் அதை ஒட்டிய தென் தமிழகம் ஆகிய இடங்களில் வெப்ப சலனத்தை காட்டுகிறது." என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.