தமிழகத்தில் 6 நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்பு: IMD அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் நிலவி வரும் மாறுபட்ட காற்று திசை காரணமாக, அடுத்த ஆறு நாட்களுக்கு மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். குறிப்பாக தென் தமிழக கடலோர மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாகக் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னை
சென்னை மற்றும் மற்ற மாவட்டங்களில் மழை நிலவரம்
திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் லேசான மழை பெய்யக்கூடும். தஞ்சாவூர், திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழையை எதிர்பார்க்கலாம். சென்னை மற்றும் புறநகர்ப் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகாலை நேரங்களில் லேசான பனிமூட்டம் நிலவக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்சியஸாகவும் பதிவாகக்கூடும்.