
கோவை, நீலகிரி உட்பட 4 மாவட்டங்களில் இன்று கனமழை: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, கோவை, நீலகிரி, தேனி, தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் இன்று (அக்டோபர் 17) கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு வங்கக்கடல், அதையொட்டிய தமிழக கடலோரப் பகுதிகள் மற்றும் ஆந்திர கடலோரப் பகுதிகளில் இரு வேறு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் மழை நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.
கனமழை
அடுத்த இரு தினங்களுக்கான மழை வாய்ப்பு
இன்றும் (செவ்வாய்க்கிழமை), நாளையும் (புதன்கிழமை) தமிழகத்தின் சில இடங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. வரும் அக்டோபர் 19 வரை சில இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும். இன்று (அக்டோபர் 17) அன்று நான்கு மாவட்டங்களில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ள அதே நேரம், நாளை (அக்டோபர் 18) திருநெல்வேலி, கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் கனமழை பெய்யலாம்.