
வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் என வானிலை மையம் கணிப்பு
செய்தி முன்னோட்டம்
வடக்கு வங்கக்கடலில் இன்று புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் தாக்கமாக, தமிழகம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மிதமான மழையுடன் இடி, மின்னல் மற்றும் சூறாவளி காற்று வீசும் வாய்ப்பு உள்ளது. வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையில், "நேற்று காலை வரை கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக மதுரை மாவட்டம் கல்லந்திரியில் 6 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. மேலும், மேற்கு திசையில் காற்றின் வேகத்தில் ஏற்பட்ட மாற்றத்தினால், தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்றும், இன்று முதல் செப்டம்பர் 7ம் தேதி வரை தொடர்ச்சியான மழைக்கு வாய்ப்பு உள்ளது" என்றும் தெரிவித்துள்ளது.
வானிலை
தமிழகத்தில் வெப்ப நிலவரம்
இன்று முதல் செப்டம்பர் 5ம் தேதி வரை, தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக பதிவாகக்கூடும். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் வானம் ஓரளவு மேகமூட்டமாக காணப்படும். சில இடங்களில் இடி, மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்யும் வாய்ப்பு உள்ளது. வானிலை ஆய்வு மையத்தின் செப்டம்பர் மாத பருவமழை கணிப்பின்படி, தமிழகத்தின் வடமாவட்டங்களில் மழை அளவு அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், தென் மாவட்டங்களில் மழை அளவு இயல்பை விட குறைவாகவே இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும், செப்டம்பர் மாதத்தில் தமிழகத்தில் பகல் நேர வெப்பநிலை சாதாரணத்தை விட குறைவாகவே இருக்கும் என வானிலைத் துறை தெரிவித்துள்ளது.