2023ஆம் ஆண்டு சாதாரண பருவமழை இருக்கும்: வானிலை ஆய்வு மையம்
2023ஆம் ஆண்டு நாட்டில் சாதாரண பருவமழை இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆனால், பருவமழையின் போது எல்-நினோ உருவாகலாம், இதனால் பருவ மழையின்அளவு பாதிக்கக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. "பருவ மழையின் அளவு சராசரியாக 96 சதவீதம் இருக்கும். இதை கணிக்க ஏப்ரல் மாத தொடக்கத்தில் கணக்கிடப்பட்ட வானிலை தரவுகள் பயன்படுத்தப்பட்டன." என்று வானிலை ஆய்வு மையம் ஒரு அறிக்கையில் தெரிவித்திருக்கிறது. எல்-நினோ அல்லது 'எல் நினோ-தெற்கு அலைவு' என்பது பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடலில் ஏற்படும் வெப்பமயமாதலால் உருவாகுகிறது. இது இரண்டு முதல் ஏழு ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழ்கிறது. இந்த எல்-நினோ, இந்தியா உட்பட உலகெங்கிலும் உள்ள வானிலையை சீர்குலைக்கும் திறனைக் கொண்டுள்ளது.
எல்-நினோ வலுப்பெற்றால் குறைவான மழையே பதிவாகும்
பருவமழையின் போது எல்-நினோ நிலவினால், அது பருவ மழையின் தீவிரத்தை பாதிக்கும். இது ஏற்கனவே பருவமழையால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு சிக்கல்களை ஏற்படுத்தும். எல் நினோவின் தீவிரத்தைப் பொறுத்து காலநிலையின் தாக்கம் மாறுபடும். இதனால், இந்தியாவில், குறிப்பாக தெற்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் குறைந்த மழைப்பொழிவு மட்டுமே பதிவாகும். இதன் காரணமாக வறட்சி ஏற்படவும் வாய்ப்பிருக்கிறது. பல விவசாயிகள் பருவ மழையை மட்டுமே நம்பி தங்கள் பயிர்களை வளர்ப்பதால், இது விவசாயிகளின் வாழ்வாதாரத்தை கடுமையாக பாதிக்கும் திறனை கொண்டுள்ளது. எல்-நினோ வலுப்பெற்றால், பஞ்சாப், ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் மிக குறைவான மழையே பதிவாகும்.